எப்போது விஜய் மக்களைச் சந்திக்கிறார்? செய்தியாளர் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் பதற்றத்துடன் காரில் புறப்பட்ட த.வெ.க. வழக்கறிஞர்!
சென்னை, அக். 8: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கக் கோரி த.வெ.க. சார்பில் டிஜிபி அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனு அளித்த த.வெ.க. வழக்கறிஞர்
கரூர் சம்பவத்திற்குப் பிறகு, விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்காதது குறித்துச் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை வீடியோ கால் மூலம் சந்தித்த விஜய், நேரில் வருவதாக உறுதியளித்தார். இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அறிவழகன், இன்று தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.
மனு அளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அறிவழகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், கரூர் விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்கு அனுமதிக் கேட்டும், அதற்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
சலசலப்பை ஏற்படுத்திய த.வெ.க. வழக்கறிஞர்
மனு அளித்த பிறகு, செய்தியாளர்கள் அவரிடம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கேள்விகள் எழுப்பினர். டிஜிபி அலுவலகத்தில் இது தொடர்பாக என்ன சொல்லப்பட்டது? எப்போது விஜய் மக்களைச் சந்திக்கிறார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
உள்ளிட்ட செய்தியாளர்கள் எழுப்பிய எந்தக் கேள்விகளுக்கும் த.வெ.க. வழக்கறிஞர் அறிவழகன் பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும், அவர் பதற்றத்துடன் அங்கிருந்து காரில் ஏறிச் சென்றதால், டிஜிபி அலுவலக வளாகத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. விஜய் நேரில் சந்திக்க அனுமதி கோரியுள்ள நிலையில், அவருக்கு அனுமதி கிடைக்குமா, எப்போது சந்திப்பு நடக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகத் த.வெ.க.வினர் காத்திருக்கின்றனர்.
