தொடரும் வெடிகுண்டு மிரட்டல்களின் எதிரொலி: ஏடிஜிபி உத்தரவின் பேரில் அவசர காலத் தயார்நிலை சோதனை!
சென்னை, அக்டோபர் 16: சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கியப் புள்ளிகளின் வீடுகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொது மருத்துவமனைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று தமிழக காவல்துறையின் அதிதீவிர படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர் வெடிகுண்டு மிரட்டல்:
தமிழகத்தில் முக்கிய இடங்களில் தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்படுவதைத் தொடர்ந்து, ஏடிஜிபி தினகரன் அவர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொது மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு அதிதீவிர படையினருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, அதிதீவிர படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு:
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அதிதீவிர படை துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் முக்கிய நோக்கம்:
அவசர காலங்களில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்வது?
மருத்துவமனையின் முழு கட்டமைப்பு, நுழைவு வாயில்கள் மற்றும் அனைத்துப் பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) மூலம் கண்காணிக்கப்படுகிறதா?
தீ விபத்து அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழும்போது, மருத்துவமனை பாதுகாப்பு விஷயங்களில் தயார் நிலையில் உள்ளதா?
அதிகாரிகள் மருத்துவமனையின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தயார்நிலையை முழுமையாக ஆய்வு செய்தனர்.