மும்பை சைபர் கிரைம் அதிகாரி எனக் கூறி மிரட்டல்; போலியான FIR, கைது வாரண்டைக் காட்டிப் பணம் பறிப்பு!
ஹைதராபாத், அக்டோபர் 18, 2025: சைபர் குற்றவாளிகள் 'டிஜிட்டல் கைது' (Digital Arrest) என்ற புதிய பாணியில் மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தின் மைதுகூர் தெலுங்கு தேசம் கட்சி MLA-வான புட்டா சுதாகர் யாதவ் இந்த மோசடியில் சிக்கி ₹1.07 கோடி இழந்த அதிர்ச்சி சம்பவம் ஹைதராபாத்தில் அரங்கேறியுள்ளது.
மோசடி நடந்தது எப்படி?
அக்டோபர் 10 அன்று காலை 7:30 மணிக்கு, 61 வயதான சுதாகர் யாதவுக்கு, மும்பை சைபர் கிரைம் அதிகாரி 'கௌரவ் சுக்லா' என்று கூறி ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரது ஆதார் மற்றும் சிம் கார்டைப் பயன்படுத்தி, பணமோசடி மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான வழக்கில் அவர் மீது மும்பையில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் ₹3 கோடி சட்டவிரோதப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அச்சுறுத்தினர்.
சிறிது நேரத்தில், 'விக்ரம்' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மற்றொரு நபர், வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் சுதாகருடன் இணைந்தார். அவர் போலியாகத் தயாரிக்கப்பட்ட கைது வாரண்ட், CBI-யின் கணக்கு முடக்க உத்தரவு மற்றும் ஆட்கடத்தல் குற்றவாளியின் புகைப்படம் ஆகியவற்றைக் காட்டி மிரட்டியுள்ளார்.
இந்த மிரட்டலில் பயந்துபோன சுதாகர் யாதவ், வழக்கில் இருந்து தற்காலிக ஜாமீன் பெற வேண்டி, மோசடி கும்பலின் அறிவுறுத்தல்களின்படி செயல்பட்டார். அக்டோபர் 10 முதல் 15 வரை, ஒன்பது தவணைகளில் மொத்தம் ₹1.07 கோடி பணத்தை அவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார். குற்றவாளிகள் மேலும் ₹60 லட்சம் பணத்தைக் 'Court Clearance Certificate' வழங்குவதாகக் கூறி கேட்டபோது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
பன்ஜாரா ஹில்ஸில் வசித்து வரும் சுதாகர் யாதவ், உடனடியாக ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இந்த 'டிஜிட்டல் கைது' மோசடி கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.