டாஸ்மாக் சரக்குகளுக்குக் கிடங்கு உண்டு; உயிர் தரும் நெல்லுக்கு வீதிதான் கதியா? - முதல்வர் மீது சீமான் கடும் தாக்கு! Godowns for Tasmac, Streets for Paddy? - Seeman Slams TN CM Stalin Over Failed Paddy Procurement in Delta

முழுநேர சினிமா விமர்சகராக ஸ்டாலின் மாறிவிட்டார் - டெல்டா விவகாரத்தில் முதல்வர் மீது எடப்பாடி பழனிசாமி கடும் சாடல்!

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டெல்டா விவசாயிகளின் நெல் கொள்முதல் பிரச்சனை, சமூக நீதி மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்துத் தமிழக அரசு மற்றும் பிற தலைவர்களைக் கடுமையாக விமர்சித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து வீணாகிறது. நம்முடைய அரசு டாஸ்மாக் சரக்குகளைப் பத்திரமாக வைப்பதற்கு கிடங்குகள் அமைத்து, அதற்குப் பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால், உயிர் தேவையான நெல்லைக் கொள்முதல் செய்யாமல் வீதியில் விட்டுவிடுகிறது, என்று சீமான் குற்றம் சாட்டினார்.

தார்ப்பாய்க்கு 4 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்தார்கள். ஆனால், சமாதிக்கு எத்தனை கோடி செலவு செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் விளைவித்த நெல்லை விட்டுவிட்டு, ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏன் அரிசி, வெல்லம் வாங்குகிறீர்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

2000 கோடிக்குப் பாலம், மெட்ரோ ரயில், விமான நிலையம் எல்லாம் கேட்டோமா? ஒரு நாள் பட்டினி கிடந்து இறந்தால் தான் அனைத்தும் தெரியும்," என்று உணர்ச்சிவசப்பட்டார். கலைஞர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் காலங்களில் நெல் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு இருந்தால், இந்த நெல்மணிகள் சாலைகள் கிடக்குமா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கரூரில் உயிரிழந்தவர்களைப் பேருந்து வைத்து மாமல்லபுரம் அழைத்துச் சென்று விஜய் சந்தித்தது குறித்த கேள்விக்கு, "அவர்களைச் சார்ட்டெட் விமானம் வைத்து அழைத்துச் செல்வதா?" என்று கேள்வியெழுப்பினார். இது ஒரு கேள்வியா? விஜய் சந்திப்பது அவருடைய விருப்பம். நான் அதைப் பற்றிப் பேசுவதை அருவெறுக்கிறேன்," என்று பதிலளித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அரசு பொறுப்பேற்கவில்லை என்றும், ஆனால் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்றும் அரசின் பாரபட்சத்தைக் கண்டித்தார். கல்வி, மருத்துவம், நீர் ஆகிய மூன்றும் என்றைக்கு விற்பனைக்கு வந்ததோ, சந்தை பண்டமாக மாற்றப்பட்டதோ, அது நாடல்ல, சுடுகாடு," என்று காட்டமாகக் கூறினார்.

பிறக்கின்ற குழந்தை புற்றுநோயுடன் பிறப்பதற்கு காரணம் நீரும், உணவும், சுவாசிக்கும் காற்றும் நஞ்சானதுதான். அதனைக் கண்டித்து உணர்த்தவே தண்ணீர் மாநாடு நடத்தப்படுகிறது என்றார். சிப்காட் தொழிற்சாலைகள் அமைத்த இடத்தில் "தண்ணீரைக் குடிக்க வேண்டாம்" என்று அரசே கூறும் நிலையில், மீண்டும் அதற்காக நிலத்தை அரசுதான் பறித்துத் தொழிற்சாலை கட்டுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தேர்தல் ஆணையத்தின் SIR திட்டம் குறித்துத் திருமாவளவன் கூறிய கருத்தை வரவேற்பதாகத் தெரிவித்த சீமான், "ஒன்றரை கோடி வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்துவிட்டால் தமிழ்நாடு இந்தி பேசும் மாநிலமாக மாறிவிடும்," என்று அச்சம் தெரிவித்தார்.

இங்குள்ள பல்வேறு சாதியினர் ஒன்றாக நிற்கவில்லை என்றால், வட இந்தியர்கள் இந்தி என்ற மொழியில் ஒன்றாக நின்று விடுவார்கள். பிறகு அனைத்தும் பா.ஜ.க. வாக்குகளாக மாறிவிடும் என்றார். அவர்களிடம் என்னுடைய அரசியலும், அதிகாரமும் சென்றுவிட்டால், தற்போழுதுள்ள நிலத்தில் இருந்தும் வெளியேற வேண்டிய அகதியாக மாறுவோம்," என்று எச்சரித்தார்.

கோவையில் வானதி சீனிவாசன் பெற்ற 20,000 வாக்குகள் வட இந்திய வாக்குகள் தான் என்றும் அவர் கூறினார். தி.மு.க.வினரிடம் இருந்துதான் நாட்டையே பாதுகாக்க வேண்டி உள்ளது என்றும் முதல்வரை விமர்சித்தார்.

பணம் செல்லாது என்று கூறிய நிலைப்பாட்டில் வெற்றி பெற்றார்களா? ஊழல், லஞ்சம் ஒழியும் என்று கூறினார்கள். அப்படி இருந்தால் அமலாக்கத்துறை சோதனை ஏன் நடைபெறுகிறது?" என்று கேள்வி எழுப்பினார். ஜி.எஸ்.டி. கொண்டு வந்த பிறகு ஏன் ஒவ்வொரு தேர்தலிலும் வரியைக் குறைக்கிறீர்கள்? மக்களைப் பாதிக்கும் வரியை அமல்படுத்தினால் அவன் ஆட்சியாளனா? அல்லது அநீதியாளனா?" என்று மத்திய அரசைக் கண்டித்தார்.

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர், விஜயகாந்த், விஜய், கமலஹாசன் ஆகியோரெல்லாம் ரசிகர்களைச் சந்தித்தார்கள். நான் ரசிகரைச் சந்தித்தேனா? என்னுடைய கட்சியில் யாராவது ரசிகர்களாக இருந்து வந்து சேர்ந்தார்கள் என்று கூறுகிறார்களா?" என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk