இரவு உணவகத்தில் வழக்கறிஞரைத் தாக்கியதாகப் புகார்: காவல்துறை இணை ஆணையாளர் அலுவலகம் முன் பரபரப்பு!
இரவு ரோந்துப் பணியில் இருந்த புளியந்தோப்பு காவலர்கள், வழக்கறிஞர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜார்ஜ் டவுன் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், இன்று காவல்துறை வடக்கு இணை ஆணையாளர் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சதீஷ். இவர் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இரவு உணவு வாங்குவதற்காகப் புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் காத்திருந்தார்.
அப்போது அங்கு இரவு ரோந்துப் பணியில் வந்த புளியந்தோப்பு காவலர்கள், வழக்கறிஞர் சதீஷை உணவகத்தில் இருந்து வெளியேறச் சொல்லி உணவக உரிமையாளரைக் கடையை அடைக்கச் சொல்லியுள்ளனர்.
இது தொடர்பாக வழக்கறிஞர் சதீஷ் கேள்வி எழுப்பியபோது, போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் உதவி ஆய்வாளர் உட்பட மற்ற காவலர்கள் சேர்ந்து, வழக்கறிஞர் சதீஷைத் தாக்கி, அவர் வீடியோ எடுத்த செல்போனைப் பறித்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த சதீஷ் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.
வழக்கறிஞர் சதீஷ் இது தொடர்பாக ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினரோடு சேர்ந்து காவல்துறை துணை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால், இதுவரை வழக்கறிஞரைத் தாக்கிய காவலர்கள் மீது காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இதைக் கண்டித்து, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜார்ஜ் டவுன் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று காவல்துறை வடக்கு இணை ஆணையாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
