'நானும் டெல்டாக்காரன்தான்' என பெருமை பேசும் முதல்வர்: நெல்மணிகள் வீணாவதற்குக் காரணம் என்ன? - விஜய் கேள்வி!
பருவமழை காரணமாக விவசாயிகள் விளைவித்த நெல் மணிகள் கொள்முதல் செய்யப்படாமல் வீணானதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், நெல் மணிகள் முளைத்ததைப் போல, திமுக ஆட்சிக்கு எதிரான தொடர் எதிர்ப்பு முளைத்து, ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி என சூளுரைத்தார்.
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகள் கடின உழைப்பால் விளைவித்த நெல் மணிகள் முதன்முறையாக வீணானபோதே, மீதமுள்ள நெல் மணிகளை அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பினார்.
விஜய் தனது அறிக்கையில் திமுக அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கடின உழைப்பின் மூலம் விளைவித்த நெல் மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் நனையவிட்டு வீணாக்கி, விவசாயியின் வயிற்றில் அடிக்கும் அரசை என்னவென்று சொல்லுவது?
விவசாயிகள் தங்கள் கையில் பணத்தைப் பார்க்கவிடாமல் தடுப்பதே திமுக அரசின் நோக்கமா என்ற ஐயம் எழுகிறது. இந்த ஆண்டு மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை நீடிப்பது வேதனையளிக்கிறது.
வெற்று விளம்பரத்திற்காக ‘நானும் டெல்டாக்காரன்தான்’ எனப் பெருமை பேசிவரும் முதல்வர், நெல் மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாததன் காரணம் என்ன?
நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து வீணாகாமல், நல்ல முறையில் பாதுகாக்க சேமித்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? நெல் மணிகள் வீணானதற்கும், விவசாயிகளின் வேதனைக்கும் திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?
மேலும், பருவமழையின் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில், மக்களைக் காக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், வெறும் வெற்று விளம்பரச் செயல்பாடுகளாக அல்லாமல், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் த.வெ.க. தலைவர் விஜய் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
