மாதவரத்தில் திருடப்பட்ட பைக்; திருவிக நகரில் சிக்கிய ஓட்டேரி கும்பல் - தப்பி ஓடிய 17 வயதுச் சிறுவனையும் கைது செய்த வேப்பேரி போலீஸ்!
சென்னை, அக்டோபர் 25, 2025: சென்னையில் கொட்டும் மழையிலும் துணிச்சலாகச் செயல்பட்ட பொதுமக்கள், இருசக்கர வாகனத் திருடர்களை சினிமா பாணியில் விரட்டி மடக்கிப் பிடித்த பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
சென்னை, மாதவரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருவர் மிக வேகமாகச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த இரண்டு வாலிபர்கள், "பைக் திருடிச் செல்கிறார்கள்" எனச் சத்தம் போட்டபடி துரத்திச் சென்றனர்.
இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் உடனடியாகச் செயல்பட்டு, தனது இருசக்கர வாகனத்தில் ஏறித் திருடர்களைத் துரத்திப் பிடிக்கச் சென்றார். தொடர்ந்து அப்பகுதியில் தேடிய கார்த்திக், திரு. வி. க. நகர் பகுதியில் பைக் திருடர்கள் வருவதைக் கண்டு, சினிமா பாணியில் பாய்ந்து ஒருவனைக் கையும் களவுமாகப் பிடித்தார்.
அப்போது பைக்கை ஓட்டிய நபர் மட்டும் கார்த்திக்கிடம் சிக்கினார். மற்றொரு நபர் தப்பித்து ஓடியுள்ளார்.பிடிபட்ட திருடனை பொதுமக்கள் திரு. வி. க. நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட நபர் ஓட்டேரியைச் சேர்ந்த நந்தகுமார் என்பதும், இவர் ஏற்கனவே வேப்பேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனத்தைத் திருடும் கும்பலில் ஒருவன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. திருடு போன பைக் குறித்து விசாரித்தபோது, அது சூளைப் பகுதியில் திருடியது என்பதும் தெரியவந்தது.
சூளைப் பகுதியில் பைக் திருடப்பட்டதால், திரு. வி. க. நகர் போலீசார் பிடிபட்ட நந்தகுமாரை திருடு போன இருசக்கர வாகனத்துடன் வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தப்பித்து ஓடிய மற்றொரு குற்றவாளியான 17 வயதுச் சிறுவனையும் வேப்பேரி போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் திருடனை விரட்டிப் பிடித்த இந்தக் காட்சி அடங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
