கோவையில் 5 சிறப்பு ரயில்கள் உட்பட 12 ரயில்கள் இயக்கம்; கூட்டத்தைக் கட்டுப்படுத்த 400-க்கும் மேற்பட்ட ஆர்.பி.எஃப்., ஜி.ஆர்.பி. பணியாளர்கள் குவிப்பு!
கோவை, அக்டோபர் 21, 2025: இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுச் சேலம் ரயில்வே மண்டலத்தின் வழியாக மட்டும் 6.3 லட்சம் பயணிகள் ரயில் பயணம் செய்துள்ளதாகச் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால் தெரிவித்துள்ளார். பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யச் சேலம் மண்டலம் மேற்கொண்ட சிறப்புக் கவனம் குறித்து அவர் விளக்கமளித்தார்.
பாதுகாப்பு மற்றும் கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள்:
கோவையில் ஆய்வு மேற்கொண்ட பிறகுச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
பயணிகளைக் கட்டுப்படுத்தவும், நெரிசலைத் தவிர்க்கவும் கோயம்புத்தூர் சந்திப்பில் 160, திருப்பூரில் 120, ஈரோட்டில் 70, சேலத்தில் 65 என மொத்தம் 400-க்கும் மேற்பட்ட ஆர்.பி.எஃப். (RPF) மற்றும் ஜி.ஆர்.பி. (GRP) பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் 24x7 முறையில் பயணிகள் ஒழுங்காக ஏறுதல், இறங்குதல், நுழைவு மற்றும் வெளியேறும் கட்டுப்பாடுகளை உறுதி செய்து கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துகின்றனர். குறிப்பிட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத சம்பவங்களைத் தடுக்க நாய் படை மற்றும் வெடிகுண்டு படை பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர் சந்திப்பின் இரு நுழைவாயில்களிலும் பயணிகளின் லக்கேஜ்களைச் சோதிக்க ஸ்கேனர் கருவிகள் செயல்படுத்தப்படுகின்றன. அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பு வார்ரூமில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன. அவசர கால விரைவு நடவடிக்கைக் குழுவும் 24x7 தயார் நிலையில் இருக்கிறது.
சிறப்பு ரயில்கள் இயக்கம்:
இந்த ஆண்டுத் தீபாவளி பண்டிகைக்காகத் தெற்கு ரயில்வே மொத்தம் 85 சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இதில் சேலம் மண்டலம் மட்டும் 12 சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
5 ரயில்கள் கோயம்புத்தூரில் இருந்தும், மேலும், 5 ரயில்கள் போத்தனூரில் இருந்து இயக்கப்படுகிறது. 1 ரயில் மேட்டுப்பாளையம் மற்றும் ஈரோட்டில் இருந்து இயக்கப்படுகிறது.
பிற மண்டலங்களில் தொடங்கிச் சேலம் மண்டலத்தைக் கடந்து செல்லும் 37 'TOD' ரயில்களும் (Through Destination) இயக்கப்படுகின்றன. வட மாநிலப் பயணிகளுக்குச் சேவை செய்யும் வகையில், ஈரோடு – ஜோக்பானி இடையேயான அமிர்த் பாரத் எக்ஸ்பிரஸில் 22 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.