முருகன் சூரபத்மனை வதம் செய்யும் கோலாகலத் திருவிழா: பக்தர்களுக்காகச் சிறப்பு இரயில்கள் ஏற்பாடு!
திருச்செந்தூர், அக்டோபர் 27: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகப் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று மாலை 4:30 மணியளவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காணத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.
இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கியது. ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை சஷ்டி திதியில் நடைபெறும் இந்தச் சூரசம்ஹார விழா, முருகப் பெருமான் சூரபத்மனை அழித்துத் தேவர்களைக் காத்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் கந்தசஷ்டி விழா தொடங்கிய முதல் நாளிலிருந்து 7 நாட்கள் விரதமிருந்து சூரசம்ஹாரம் மற்றும் அடுத்த நாள் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வில் முருகனைத் தரிசித்து விரதத்தை நிறைவு செய்வார்கள்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போது சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளி, திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, திருச்செந்தூர் கடற்கரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 4,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் பாதுகாப்புக் கருதி, கடற்கரையில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சூரசம்ஹாரத்தில் கலந்துகொள்ள வந்துள்ள பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கு ஏதுவாக, இன்றிரவே சிறப்பு இரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும், உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
 

