பேருந்தை வழிமறித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம்; ஜீப் ஓட்டுநர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர்; காட்டுக்குள் ஓடிய மாணவர்களைத் தேடும் பணி!
கேரளா, மூணாறு, அக்டோபர் 24, 2025: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே மறையூர் பகுதியில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கும் உள்ளூர் ஜீப் ஓட்டுநர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஜீப் ஓட்டுநர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சுற்றுலாப் பேருந்து ஒன்றில் மறையூர் பகுதிக்குச் சுற்றுலா வந்துள்ளனர். பேருந்தைச் சாலையோரம் நிறுத்திவிட்டுச் சிலர் இயற்கை காட்சிகளைக் காணக் கீழே இறங்கியுள்ளனர்.
அப்போது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஜீப் ஒன்று பேருந்தின் பின்னால் நின்று தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளது. இதனால் கோபமடைந்த பேருந்தில் இருந்த மாணவர்களுக்கும் ஜீப் டிரைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜீப் ஓட்டுநர் அங்கிருந்த மற்ற ஜீப் ஓட்டுநர்களை அழைத்துள்ளார். அங்கு வந்த ஜீப் ஓட்டுநர்கள் பேருந்தின் கண்ணாடியைக் கல் வீசி உடைத்தனர். மாணவர்களும் ஜீப் ஓட்டுநர்களைத் தாக்கினர்.
இந்தத் தாக்குதலில் ஜீப் டிரைவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அடிமாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு அஞ்சிய சில மாணவர்கள் அங்கிருந்து காட்டுப் பகுதிக்குள் ஓட்டம் பிடித்தனர். காட்டுப்பகுதிக்குள் ஓடியவர்களைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
