செங்கல்பட்டு நட்சத்திர விடுதியில் 3 மணி நேரம் நீடித்த சந்திப்பு: கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாகப் பெற்று உதவி செய்ய உறுதி!
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடனான தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜயின் ஆறுதல் சந்திப்பு இன்று நிறைவடைந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி கோரி த.வெ.க. சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்ட நிலையில், இன்று இந்தச் சந்திப்பு நடந்தது.
மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில், உயிரிழந்தவர்களின் 37 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை தனித்தனியே அழைத்துத் தலைவர் விஜய் ஆறுதல் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சந்திப்பு முடிந்த பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் கரூருக்குப் புறப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் அவர்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாகப் பெற்றுக்கொண்ட விஜய், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சுயதொழில் தொடங்குதல், சொந்த வீடு, கடன் பிரச்சினைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விஜய் கவனமாகக் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
