83 வயது முதியவரை மிரட்டி மோசடி; ராணிப்பேட்டை, ராமநாதபுரம், தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்தோர் சிக்கினர்; மொத்தம் 4 பேர் கைது!
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பட்டாபி (83) என்ற முதியவரை, சங்கர் என்ற பெயரில் மும்பை குற்றப்பிரிவு ஆய்வாளராக அறிமுகம் செய்துகொண்ட நபர், செப்டம்பர் 1 முதல் 12-ஆம் தேதிக்குள் பலமுறை வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டுள்ளார். சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை செய்ததாக மிரட்டி, பணத்தைத் 'தணிக்கைக்காக' அனுப்பினால் திருப்பி அனுப்பிவிடுவதாகக் கூறி, ரிசர்வ் வங்கியின் பெயரில் உள்ள போலி கணக்கிற்கு ₹44 லட்சத்தை இரு தவணைகளாக RTGS மூலம் முதியவர் அனுப்பியுள்ளார்.
புகாரைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மோசடிப் பணம் தெலுங்கானா மாநிலம் IndusInd வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து பல்வேறு கணக்குகளுக்குப் பிரிக்கப்பட்டு, காசோலை மூலம் எடுக்கப்பட்டதும், வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதும் தெரியவந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் இருந்து ₹5.10 லட்சம் எடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்த போலீசார், லட்சுமணன் மற்றும் மேடிசிவகுமார் ஆகியோரை அக்டோபர் 10-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் மேலும் இரண்டு முக்கியப் புள்ளிகள் ஈடுபட்டது தற்போது தெரியவந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரமூர்த்தி என்பவர், சென்னை, அண்ணா சாலை வங்கிக் கிளையில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் வங்கி துணை மேலாளராகப் பணியாற்றியவர். மோசடிப் பணத்தைப் பெறுவதற்காகப் பல வங்கிக் கணக்குகளை உருவாக்குவதற்கு இவர் உதவியாக இருந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது முஸ்பிக் என்பவர் மோசடிப் பணத்தை மாற்றும் முகவராகச் செயல்பட்டவர்.
தர்மபுரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, ஆவடி ஆகிய பகுதிகளில் தேடப்பட்டு வந்த ராமச்சந்திரமூர்த்தி மற்றும் முகமது முஸ்பிக் ஆகிய இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று (24.10.2025) கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குற்ற சம்பவத்திற்குப் பயன்படுத்திய 2 கைப்பேசிகள் மற்றும் 10 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று (25.10.2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படிச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை காவல் ஆணையர் அருண் அவர்கள், இத்தகைய போலி அழைப்புகள், அதிக லாப முதலீட்டு விளம்பரங்கள் போன்றவற்றில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் வங்கிக் கணக்கைத் துவங்குவோர்கள் மற்றும் கொடுப்போர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இணையவழி மோசடியில் பணத்தை இழந்தால், பொதுமக்கள் உடனடியாக உதவி எண்: 1930-ல் புகார் அளிக்குமாறும், அல்லது https://cybercrime.gov.in என்ற வலைதளத்தில் புகார் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
