11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய தேர்வின் முடிவுகள் இன்று (அக். 22) வெளியீடு: கட் ஆஃப் குறைய வாய்ப்பு உள்ளதாகக் கல்வியாளர்கள் கருத்து!
சென்னை, அக்டோபர் 22, 2025: தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த குரூப்-4 (Group-4) தேர்வு முடிவுகளை இன்று (அக்டோபர் 22) வெளியிட்டுள்ளது..
கடந்த வருடம் ஜூலை 12, 2025 அன்று கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் (Junior Assistant) உள்ளிட்ட நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடைபெற்றது.
மொத்தப் பணியிடங்கள்: அறிவிப்பின்போது 3,935 பணியிடங்கள் இருந்த நிலையில், தற்போது 727 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 4,662 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வினை சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 11,48,019 பேர் இத்தேர்வை எழுதியிருந்தனர்.
இத்தேர்வு கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு (100 கேள்விகள்), பொது அறிவு (75 கேள்விகள்), மற்றும் திறனறிப் பகுதி (25 கேள்விகள்) என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.
கட் ஆஃப் குறைய வாய்ப்பு:
இந்த முறை தேர்வு சற்று கடினமாக இருந்ததாகத் தேர்வர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவித்த நிலையில், கட் ஆஃப் மதிப்பெண் கடந்த முறையை விடக் குறைவாகவே இருக்கும் என்று கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முடிவுகளைத் தெரிந்து கொள்வது எப்படி?
குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (Official Website) வெளியிடப்பட்டுள்ளன. முடிவுகளைத் தெரிந்து கொள்ளும் வழிமுறைகள்:
முதலில் https://www.tnpsc.gov.in/ என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
முகப்புப் பக்கத்தில், ”12.07.2025 மு.ப நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - IV (தொகுதி – IV) பதவிகளுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளன” என்ற தலைப்பில் உள்ள இணைப்பை ("Link") கிளிக் செய்ய வேண்டும்.
தோன்றும் புதிய பக்கத்தில், உங்கள் பதிவெண், பிறந்த தேதி மற்றும் கேப்சா குறியீடு (Captcha Code) கொடுத்து உள்நுழைய வேண்டும்.
இப்போது திரையில் உங்கள் தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும். அதில் உங்கள் தமிழ் தகுதித் தேர்வு மதிப்பெண், ஒட்டுமொத்த மதிப்பெண், பொதுத் தரவரிசை நிலை, சாதிப்பிரிவு தரவரிசை நிலை போன்றவை இடம்பெற்றிருக்கும். குறிப்பிட்ட பதவிகளுக்கான தனிப்பட்ட தரவரிசை நிலை தகுதியுள்ளவர்களுக்குக் காண்பிக்கப்படும். தேர்வு முடிவுகளை எதிர்காலக் குறிப்புக்காகப் பிரிண்ட் (Print) எடுத்துச் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு:
சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தெரிவு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். அத்தகைய தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும்; அஞ்சல்/கடிதம் வழியாகத் தகவல்கள் ஏதும் அனுப்பப்பட மாட்டாது என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.