ஆபரேஷன் சிந்தூர் ஒரு முக்கியமான பாடம்: பாதுகாப்புத் துறையில் சுயசார்பை விரைவுபடுத்த ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்!
இந்தியா எப்போதும் ஒரு போர்ச் சூழலுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும், நமது ராணுவம் உள்நாட்டுத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்புத் துறையில் சுயசார்பை (Aatmanirbharta) மேலும் விரைவுபடுத்துமாறும் அவர் இந்தியத் தொழில்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக மே 7 முதல் 10ஆம் தேதி வரை இந்தியா உறுதியான பதிலடி கொடுத்ததாகவும், நாட்டின் எல்லைகளை ஆயுதப் படைகள் எப்போதும் பாதுகாப்பான நிலையில் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "ஆபரேஷன் சிந்தூர்" ஒரு முக்கியமான படிப்பினையாக எடுத்துக்கொண்டு, நமது எதிர்காலத் திட்டங்களைத் தீர்மானிக்க வேண்டியது அவசியம் எனவும் எடுத்துரைத்தார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகள், ஆகாஷ் தீரர் வான் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பு போன்றவை திறம்படப் பயன்படுத்தப்பட்டன.
இதன் காரணமாக சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயர் உயர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். உலகளாவிய நிலையற்ற சூழலில், உள்நாட்டுமயமாக்கல் மட்டுமே நம்மைப் பாதுகாக்கும் ஒரே வழி என அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபடத் தெரிவித்தார்.
தொழில்துறை நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியப் பாதுகாப்புத் துறை உள்நாட்டுத் திறன்களை முழுமையாக நம்பித் தயாராக இருக்க வேண்டும் என்பதே அவரது வலியுறுத்தலின் சாராம்சமாகும்.
