LIC-யின் முடிவுகள் முழுச் சுதந்திரத்துடன் எடுக்கப்பட்டவை; நிறுவனத்தின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சி என LIC குற்றச்சாட்டு!
அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்ட ஒரு செய்தியில், அதானி குழும நிறுவனங்களில் சுமார் ₹32,500 கோடி ரூபாய் முதலீடு செய்யுமாறு இந்திய அதிகாரிகள் LIC-ஐ வழிநடத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் உள்ள குற்றச்சாட்டுகள் "பொய்யானவை" மற்றும் "ஆதாரமற்றவை" என்று LIC திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. அதானி குழும நிறுவனங்களில் LIC செய்துள்ள அனைத்து முதலீடுகளும் முழு சுதந்திரத்துடன் எடுக்கப்பட்ட முடிவுகள் என்றும், அவை எந்தவித வழிகாட்டுதலுக்கும் உட்பட்டவை அல்ல என்றும் LIC விளக்கம் அளித்துள்ளது.
இந்த முதலீடுகள் அனைத்தும் LIC வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) வழங்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில், முறையான ஆய்வுக்குப் பிறகே செய்யப்பட்டதாக LIC உறுதிப்படுத்தியுள்ளது.
LIC-யின் முடிவெடுக்கும் நடைமுறையைத் தவறாகச் சித்தரித்து, "நிறுவனத்தின் நற்பெயரையும், இந்தியாவின் வலிமையான நிதித் துறையின் அடித்தளத்தையும் களங்கப்படுத்தும் நோக்கத்துடன்" இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று LIC குற்றம் சாட்டியுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் செய்தி, அதானி குழுமம் நிதி நெருக்கடியில் இருந்த சமயத்தில் இந்திய அதிகாரிகள் LIC-ஐப் பயன்படுத்தி முதலீடு செய்யத் திட்டமிட்டதாகக் கூறியிருந்தது. குறிப்பாக, அதானி Ports & SEZ நிறுவனத்தில் LIC, மே 2025-இல் சுமார் ₹5,059 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும், அதானி குழுமத்தில் LIC-யின் முதலீட்டுப் பங்களிப்பு, அதன் மொத்தச் சொத்து மதிப்பில் மிகக் குறைந்த சதவீதத்தையே கொண்டுள்ளது என்று LIC சுட்டிக்காட்டியுள்ளது.
ரிலையன்ஸ், ITC, HDFC வங்கி, SBI போன்ற பல முன்னணி இந்திய நிறுவனங்களில், அதானியை விட அதிக பங்குகளை LIC வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதானி விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் எழுப்பப்பட்டு வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக LIC வெளியிட்ட இந்த மறுப்பு அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
