வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகக் குற்றச்சாட்டு; "பீகார் தேர்தலில் ஜனநாயகம் வெல்லுமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்" - கனிமொழி கருத்து!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள், திருநெல்வேலியில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகப் பேரிடர் நிவாரணம் குறித்து மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார்.
சமீபத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு வந்துள்ள நிலையில், அது குறித்துப் பேசிய கனிமொழி எம்.பி பேசியதாவது, மத்திய அரசின் ஆய்வுக் குழு இந்த முறையாவது, மாநில அரசு கேட்கும் போதுமான நிவாரணத்தைத் தருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மத்திய அரசின் நிவாரண நிதி ஒதுக்கீட்டைக் கடுமையாக விமர்சித்த அவர், "ஒவ்வொரு முறையும் தமிழக முதல்வர் கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு கொடுக்காமல், கிள்ளி மட்டுமே கொடுக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிவாரணம் கிள்ளி கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை. விவசாயிகள் பயன்பெறும் வகையில் போதுமானதாக மத்திய அரசு நிவாரணத்தை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல் குறித்துக் கனிமொழி எம்.பி.யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், பீகார் தேர்தலில் ஜனநாயகம் வெல்லுமா அல்லது தோற்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கருணாநிதி, தமிழகத்தின் பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, மத்திய அரசு பாரபட்சமின்றி உடனடியாகப் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
