இதுவரை 28 லட்சம் புதிய விண்ணப்பங்கள்; நவம்பர் 30-க்குள் கள ஆய்வு முடியும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
சென்னை, அக்டோபர் 16: தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1 கோடியே 16 லட்சம் மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சுமார் ₹24,000 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில், விடுபட்ட கூடுதல் பயனாளிகளைச் சேர்க்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிதாக விண்ணப்பித்த தகுதியான மகளிருக்கு வரும் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள்:
திட்டத்தின் நோக்கம்: கூடுதல் பயனாளிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை அறிவித்தார்.
முகாம்களின் சேவை:
கிராமப்புறங்களில் முகாம்கள் மூலமாக 15 துறைகளின் வாயிலாக 45 சேவைகளும் வழங்கப்படுகின்றன. நகர்ப்புறங்களில் 13 துறைகளின் வாயிலாக 43 சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
நவம்பர் 15-ஆம் தேதி வரை 10,000 முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் (அக். 15) வரை 9,055 முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. மகத்தான வரவேற்பு: இந்த முகாம்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
புதிய உரிமைத் தொகை விண்ணப்பங்களின் நிலை:
உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இதுவரை 28 லட்சம் மகளீர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. புதிதாகப் பெறப்பட்டுள்ள இந்த விண்ணப்பங்களை வருவாய்த் துறை மூலமாகக் கள ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அறிவிப்பு: நவம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்தக் கள ஆய்வு முடிவடைந்து, தகுதியான மகளிருக்கு வருகிற டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் முடிவெடுத்துள்ளார். தமிழ்நாட்டு மகளினுடைய பொருளாதார மேம்பாட்டிற்கு அரசு என்றும் துணை நிற்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.