பந்தை பிடித்த வேகத்தில் கீழே விழுந்த போது மார்பு விலா எலும்பில் காயம் ஏற்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின்போது விலா எலும்பில் காயம் அடைந்த இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 25-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், அலெக்ஸ் கேரியின் கேட்ச்சை பிடிக்க, பின்னோக்கி ஓடிய ஷ்ரேயாஸ் ஐயர் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவரது இடது விலா எலும்புக் கூண்டில் (Left Rib Cage) காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஷ்ரேயாஸ் ஐயருக்கு விலா எலும்புக் காயம் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். மேலும், இரத்தப்போக்கின் காரணமாகத் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக, அவர் உடனடியாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைவதைப் பொறுத்து, இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என கூறப்படுகிறது.
முதலில், இந்த காயத்திலிருந்து அவர் மூன்று வாரங்களில் மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உள் இரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதால், அவர் முழுமையாகக் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வருவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 31 வயதான ஷ்ரேயாஸ் ஐயர், இந்தியா திரும்புவதற்கு முன்பு ஒரு வாரமாவது மருத்துவமனையில் இருக்க நேரிடும் என்றும் தெரிகிறது.
.jpg)