அக். 18 முதல் 22 வரை 5 நாட்கள் தீயணைப்பு வீரர்கள் தொடர் பணியில் இருக்க உத்தரவு; சென்னைக்குக் கூடுதலாக 24 இடங்களில் பாதுகாப்பு!
சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தமிழ்நாட்டில் 859 பட்டாசுக் கடைகளுக்குத் தடையில்லாச் சான்று (No Objection Certificate - NOC) மறுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தீ விபத்துகளைத் தவிர்க்க, வீரர்கள் தொடர் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
வீரர்கள் தொடர் பணி: தமிழகம் முழுவதும் உள்ள 384 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் கூடுதல் பாதுகாப்பு:
கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில், சென்னை பெருநகரில் மட்டும் கூடுதலாக 24 இடங்களில் தீயணைப்பு ஊர்திகள் நிறுத்தப்பட உள்ளன. இதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து ஊர்திகளும் குழுவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள 43 நிலையங்களில் உள்ள பணியாளர்கள், அக்டோபர் 18-ஆம் தேதி மாலை 5 மணி முதல் அக்டோபர் 22-ஆம் தேதி காலை 8 மணி வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
சென்னையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் தீயணைப்பு ஊர்திகளுக்கு நீர் வழங்க, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திடமிருந்து 50 தண்ணீர் லாரிகள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடைகளுக்கு அனுமதி மறுப்பு:
தற்காலிக அனுமதி: தமிழகத்தில் தற்காலிகப் பட்டாசு விற்பனை செய்வதற்கு 9,207 கடைகளுக்கும், சென்னை பெருநகரில் 1,088 கடைகளுக்கும் தடையின்மைச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படாததால், தமிழகம் முழுவதும் 770 கடைகளுக்கும், சென்னையில் மட்டும் 89 கடைகளுக்கும் (மொத்தம் 859 கடைகள்) தடையின்மைச் சான்று மறுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து, தமிழகம் முழுவதிலும் 2,705 இடங்களில் (பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில்) விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் நடத்தப்பட்டதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.