இரண்டாவது அறுவை சிகிச்சைக்குப் பின்னும் நிலைமை மோசமானது: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சென்னை அயனாவரத்தில் உள்ள ESI மருத்துவமனையில் கண்புரை அறுவைச் சிகிச்சை செய்த காவலாளி ஒருவர் நிரந்தரமாகப் பார்வை இழந்ததையடுத்து, மருத்துவமனையின் அலட்சியமே இதற்குக் காரணம் எனத் தீர்ப்பளித்த நுகர்வோர் நீதிமன்றம், அவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், ரூ.10 ஆயிரம் வழக்குச் செலவும் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
காவலாளியாகப் பணியாற்றி வந்த தனசேகரன் என்ற நபர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கண் பார்வை மங்கலாக இருப்பதாகக் கூறி ESI மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்குக் கண்புரை இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்தனர்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய தனசேகரனுக்குத் தொடர்ந்து கண் வலி, எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக அவர் மீண்டும் அதே மருத்துவமனைக்குச் சென்றபோது, புரை சிறிய அளவு மீதமுள்ளதாகக் கூறி, "கார்டெக்ஸ் ரீ-ஆஸ்பிரேஷன்" எனும் மறு அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டனர்.
இதன் பின்னரும் கண் எரிச்சல் மற்றும் வீக்கம் குறையாமல் இருந்ததால், அவரை எழும்பூர் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், மெல்ல மெல்ல அவரது வலது கண்ணின் பார்வை முழுமையாக இழந்தது.
தவறான சிகிச்சையாலும், மருத்துவமனையின் அலட்சியத்தாலும் தனது பார்வை இழந்ததாகக் கூறி தனசேகரன் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவமனையின் அலட்சியமே தனசேகரனின் பார்வை இழப்பிற்குக் காரணம் எனத் தீர்ப்பளித்தனர். இதன் அடிப்படையில், ESI மருத்துவமனை நிர்வாகம் தனசேகரனுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடாகவும், ரூ.10 ஆயிரம் வழக்குச் செலவுக்காகவும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
