தமிழக மேற்கு மாவட்டங்களில் மனித உரிமை மீறல் புகார்கள் அதிகம்: நெல்லையில் ஆணைய உறுப்பினர் அதிர்ச்சித் தகவல்! SHRC Member Expresses Concern Over Police Inaction After Tiruppur Lawyer's Murder Complaint

ஒடுக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக ஆணையம் இருக்கும்: அடிப்படை வசதிப் பிரச்சினைக்கு 45 ஆண்டுகளுக்குப் பிறகு விடிவு காலம்!

நெல்லை, அக்டோபர் 24, 2025: தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து மனித உரிமை மீறல் புகார்கள் அதிகம் வருவதாக, நெல்லையில் மாநில மனித உரிமை ஆணைய (State Human Rights Commission) உறுப்பினர் கண்ணதாசன் அவர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆணையம் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நெல்லையில் இன்று (அக். 24) நடைபெற்ற மாநில மனித உரிமை ஆணைய விசாரணையில், உறுப்பினர் கண்ணதாசன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நெல்லை அமர்வில் இன்று 14 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதன் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தில் புகார்கள் குறையவில்லை; மாதந்தோறும் ஆயிரக்கணக்கான புகார்கள் வருகின்றன.

குறிப்பாக, மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியவற்றில் இருந்து அதிகப் புகார்கள் வருவதாக அவர் தெரிவித்தார்.

மேற்கு மாவட்டங்களில் போலீசாரின் செயல்பாடுகள் கவலை அளிப்பதாகக் குறிப்பிட்ட கண்ணதாசன், திருப்பூரில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தை உதாரணமாகக் கூறினார். திருப்பூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர், தன் தந்தையைச் சித்தப்பா கொன்றுவிட்டதாகவும், தனக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்தார். ஆனால் போலீஸ் அந்தப் புகாரைப் பதிவு செய்யவில்லை. அவர் ஆணையத்தில் முறையிட்டு 'இன்றே விசாரியுங்கள், நான் அடுத்த முறை உயிருடன் வருவேனா எனத் தெரியவில்லை' என்று கோரினார். 

துரதிர்ஷ்டவசமாக, அவர் சொன்ன மூன்றே நாட்களில், அவர் குற்றம்சாட்டிய நபர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார். தற்போது கணவரையும் மகனையும் இழந்த அந்தத் தாயார் எங்களிடம் புகார் அளித்துள்ளார். மேற்கு மாவட்டங்களில் போலீசாரின் இதுபோன்ற செயல்பாடுகள் மிகவும் கவலை அளிக்கின்றன. இன்றைய அமர்வில், நெல்லை திருப்பணிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் இல்லை என்று கொடுத்த புகாரின் பேரில், அரசு அலுவலர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

இதில் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்சார வாரியத்திற்கு இடையே இருந்த இடர்பாடுகள் களையப்பட்டு விட்டதாகவும், வனத்துறையினரும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 45 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்தப் பிரச்சினைக்குத் தற்போது ஒரு விடிவு காலம் வந்திருக்கிறது, என்று கூறிய ஆணைய உறுப்பினர், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வரும் நவம்பர் 21ஆம் தேதி இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அரசின் இந்த முயற்சியைப் பாராட்டினார்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் முன்னாள் போலீஸ் அதிகாரி மற்றும் எஸ்ஐ-க்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளில் 99 சதவீதம் உண்மைகள் இருப்பதில்லை என்றார். பாதுகாப்பு கருதியே அவர்களைத் தனியாகப் பிரித்து வைப்பது வழக்கமான நடைமுறைதான் என்றும், சிறைக்குள் அனைவருக்கும் தரமான உணவு வழங்கப்படுவதால், வெளிப்புற உணவு தேவையில்லாத சூழலே நிலவுகிறது என்றும் அவர் விளக்கமளித்தார்.

இந்த விவகாரத்தில் அறிக்கைகள் முழுமையற்றதாக இருந்ததால், மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பதில் வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

சிவில் வழக்குகளில் போலீசார் தலையிடுவதை ஆணையம் ஏற்காது. வசதி படைத்தவர்களுக்கு ஆதரவாகப் போலீசார் தலையிட்டால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம், மனிதாபிமான அடிப்படையில் ஏழை மக்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk