தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை வெறும் பெயர் மாற்றம் மட்டுமே சம நீதி ஆகாது - தமிழக அரசை விமர்சனம்!
கோவை, அக்டோபர் 16: தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்தும்போது தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் சரிசம முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக அரசின் மீதான விமர்சனங்கள்:
தூய்மைப் பணியாளர்களில் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் கேட்கும் ஒரே கேள்வி, திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னீர்களே, செய்தீர்களா? என்பதாகத்தான் உள்ளது. ஆனால், மத்திய பாஜக அரசு சொன்னதை எல்லாம் செய்த காரணத்தினால் தான் பிரதமர் மோடிக்கு மக்கள் மீண்டும் வாய்ப்பளித்திருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
'காலணி' மற்றும் பெயர் மாற்றம் சர்ச்சை:
தமிழக அரசின் அரசாணைகள் விசித்திரமாக இருக்கின்றன என்று அவர் விமர்சித்தார். காலணி என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என முதலமைச்சர் அறிவித்திருக்கும் நிலையில், பட்டியலின மக்களும் சம உரிமையோடு வாழ வேண்டும் என்று உறுதியாக இருந்தாலும், எங்களின் கோவையில் சாய்பாபா காலணி மற்றும் என்.ஜி.ஓ. காலணியில் உள்ள காலணியை எடுத்துவிட்டால் சரியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல, விடுதிகளுக்கு சமூக நீதி விடுதிகள் எனப் பெயர் மாற்றம் செய்வதால் மட்டுமே பட்டியலின மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அவர்களுக்கான உணவு, சுகாதாரச் சூழல், தரமான விடுதிகள் என்பது இல்லாமல் வெறுமனே பெயரை மட்டுமே மாற்ற நினைத்தால் நாம் ஏமாந்து போவோம் என்றும் வானதி சீனிவாசன் எச்சரித்தார். மேலும், தமிழகத்தில் குடமுழுக்கு செய்யும் கோயில்களில் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் சம முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.