திராவிட மாடல் தோற்றுக் கொண்டிருக்கிறது; விஜய்யுடன் கூட்டணி என்பது வருங்காலம் முடிவு செய்யும்! - முன்னாள் ஆளுநர் பேட்டி!
சென்னை, அக்டோபர் 16: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் விவகாரத்தில் தமிழக அரசு, நடிகர் விஜய்க்கும், அவரது கட்சித் தொண்டர்களுக்கும் அநீதி இழைத்துள்ளதாக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டினார். மேலும், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்து வருங்காலம் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழிசை சௌந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசியதாவது,
சட்டசபையில் இன்று கரூர் விவகாரம் குறித்து முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் விவாதம் நடந்திருக்கிறது. விஜய்யின் கூட்டத்திற்கு முழுமையான கவனம் செலுத்தாமல் அரசாங்கம் விஜய்க்கு மட்டுமல்லாமல் அவர்களது தொண்டர்களுக்கும் அநீதி இழைத்திருக்கிறது. வானூர்தி சாகச நிகழ்ச்சியில் ஐந்து பேர் உயிரிழந்ததற்கு யார் மீது பழி போடுவீர்கள்? கட்சியைச் சார்ந்தவர்களை காப்பாற்றுவதற்காக முன்னிறுத்தும் முதலமைச்சருக்குத் தனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
வெளிநாட்டு முதலீடு எல்லாமே பொய்யாக இருக்கிறது. திராவிட மாடல் தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு கரூர் விவகாரம் ஒரு சாட்சி, என்று அவர் குற்றம் சாட்டினார். உடற்கூராய்வு எத்தனை மணி நேரத்தில் நடைபெற்றது, அது சாத்தியம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் தமிழிசை வலியுறுத்தினார்.
விஜய்க்கு ஆதரவும், கூட்டணி குறித்து கருத்தும்:
ஆர்ப்பாட்டம் நடக்கக் கூடாது என்று கருத்தைப் பதிவிடுபவர்களைக் கைது செய்கிறீர்கள். எதிர்க்கட்சியினரின் குரல்வளைகளை நெறிக்க முடியாது. விஜய் பாதிக்கப்பட்டவர். எனவே அவருடன் இருப்போம், என்று அவருக்கு ஆதரவாகத் தெரிவித்தார். விஜய்யுடன் கூட்டணி அமைப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, விஜய்யுடன் கூட்டணி என்பது வருங்காலம் முடிவு செய்யும் என்று பதிலளித்தார்.