பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை: ஆன்லைன் மூலமாக ஆஜராகும் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!
நாடு முழுவதும் உள்ள தெருநாய் கடி தொடர்பான வழக்குகளில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று (அக். 31) அதிரடியாக மறுத்துவிட்டது. மேலும், ஆன்லைன் மூலமாக ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.
தெருநாய் கடி தொடர்பான வழக்கில் மாநிலங்கள் செயல்படும் விதம் குறித்து நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நாங்கள் உத்தரவிட்டு அவகாசம் வழங்கிய போதும், பெரும்பாலான மாநிலங்கள் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்யவில்லை.
இதுவரை ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் இரண்டு மாநிலங்கள் மட்டுமே பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளன என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் ஒரே நேரத்தில் ஆஜராகும்போது ஏற்படும் இடநெருக்கடியைச் சமாளிப்பது குறித்து கிண்டலாகக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதிகப்படியான நபர்கள் வருகிறார்கள் என்றால், நாம் ஒரு ஆடிட்டோரியத்தை எடுக்கலாமா? என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்த உத்தரவு, மாநில நிர்வாகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தின் மீது உச்ச நீதிமன்றம் கொண்டுள்ள கடுமையான பார்வையை வெளிப்படுத்துகிறது.
