மின்னஞ்சல் மூலம் மிரட்டல்; தேனாம்பேட்டை, மாம்பலம் போலீசார் தீவிர விசாரணை!
சென்னை, அக்டோபர் 17: சென்னையில் இன்று (அக். 17) குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இல்லம் மற்றும் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேயின் 'சாணக்கியா' யூடியூப் சேனல் அலுவலகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை சோதனையில் இரண்டு மிரட்டல்களும் புரளி எனத் தெரிய வந்தது.
குடியரசு துணைத் தலைவர் வீட்டுக்கு மிரட்டல்:
சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையம் மற்றும் மயிலாப்பூர் உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் (E-Mail) மூலம் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தகவலையடுத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு தேனாம்பேட்டை போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்று தீவிரச் சோதனை நடத்தினர்.
சோதனையில் எந்தப் பொருளும் கண்டறியப்படாததால், இந்த மிரட்டல் புரளி என உறுதிப்படுத்தப்பட்டது. தேனாம்பேட்டை போலீசார் மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரங்கராஜ் பாண்டே அலுவலகத்துக்கு மிரட்டல்:
பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் 'சாணக்கியா' யூடியூப் சேனல் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அலுவலகம் சென்னை மாம்பலம் பகுதியில் உள்ளது. தகவலையடுத்துக் காவல்துறையினர் அங்குச் சென்று சோதனையிட்டனர். சோதனையில் இதுவும் புரளி எனத் தெரிய வந்தது. மாம்பலம் போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.