பயங்கரவாத அச்சத்தில் முஷாரஃப் சரணடைவு: இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு அணு ஆயுத மோதல் தவிர்ப்பு!
வாஷிங்டன், அக்டோபர் 24, 2025: பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் (Pakistan's Nuclear Weapons) ஒரு காலத்தில் அமெரிக்காவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்ததாக, மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ (John Kiriakou) வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஜான் கிரியாகோ இந்த விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
கிரியாகோ, 2002ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பணியாற்றிய காலத்தில், அந்நாட்டின் அணு ஆயுதங்கள் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பென்டகனின் (Pentagon) கட்டுப்பாட்டில் இருந்ததாகத் தெரிவித்தார்.
அப்போது பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப், அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளில் கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தால், அவற்றின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைத்தார் என்றும் கிரியாகோ கூறினார். முஷாரஃப்பின் இந்த ஒத்துழைப்புக்காக அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர்கள் நிதியுதவி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரியாகோ மேலும் பேசுகையில், 2001ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் 2008ஆம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா ராணுவ ரீதியில் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் என வாஷிங்டன் எதிர்பார்த்தது என்றார்.
ஆனால், இந்தியா அவ்வாறு தாக்குதல் நடத்தவில்லை. இந்த முடிவை அமெரிக்கா 'மிகுந்த பொறுமையுடனும் முதிர்ச்சியுடனும் எடுத்த முடிவு' எனக் குறிப்பிட்டது. அந்த முடிவுதான் அணு ஆயுத மோதலைத் தவிர்த்தது," என்றும் கிரியாகோ கூறினார்.
பர்வேஸ் முஷாரஃப் ஒருபுறம் அமெரிக்காவுடன் இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராகச் செயல்பட்டது போலக் காட்டிக்கொண்டு, மறுபுறம் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை அனுமதித்தார் எனவும் கிரியாகோ வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தின் முக்கிய நிபுணரான அப்துல் காதிர் கான் மீது நடவடிக்கை எடுக்காதது அமெரிக்க அரசின் மிகப்பெரிய தவறு எனவும் கிரியாகோ சாடினார். இதற்கு சவுதி அரேபிய அரசின் நேரடித் தலையீடே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜான் கிரியாகோவின் இந்தக் கருத்துகள், இந்தியா–பாகிஸ்தான் உறவு, பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
