கபீர், சிப்கத்துல்லா, ஹாரூன் உட்பட 8 பேர் உயிரிழப்பு; பாகிஸ்தான் அரசைக் கடுமையாக விமர்சித்தது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
காபுல், அக்டோபர் 18: பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் உள்ள உர்குன் என்ற இடத்தில் இருந்து ஷரானாவுக்குச் வீரர்கள் நட்புரீதியான போட்டியில் பங்கேற்கப் பயணம் மேற்கொண்டபோது இந்தத் தாக்குதல் நடந்தது. இதில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கபீர், சிப்கத்துல்லா, ஹாரூன் ஆகிய 3 வீரர்கள் உட்பட மேலும் 5 பேர் என மொத்தம் 8 பேர் பலியானதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் ஏழு பேர் காயமடைந்ததாகவும் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கண்டனம்:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) இந்தத் தாக்குதலைக் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தத் தாக்குதல் பாகிஸ்தான் அரசால் நடத்தப்பட்ட ஒரு கோழைத்தனமான தாக்குதல் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையாக விமர்சித்துள்ளது.
வீரர்களின் துயரமான தியாகத்திற்கு வாரியம் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்து, இது ஆப்கானிஸ்தானின் விளையாட்டு சமூகத்திற்கும் கிரிக்கெட் குடும்பத்திற்கும் பெரும் இழப்பாகக் கருதுகிறது. முத்தரப்புத் தொடரிலிருந்து விலகல்: உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நவம்பர் மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்புத் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் விலகியுள்ளது. இந்த முடிவை ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டன் ரஷீத் கான் வரவேற்றுள்ளார்.
உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய இறைவனை வேண்டி கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.