சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை குறித்து விசாரணை: வங்கி ஆவணங்களுடன் அக்டோபர் 28, 29 தேதிகளில் ஆஜராக உத்தரவு!
சென்னை, அக்டோபர் 24, 2025: போதைப்பொருள் வழக்கில் ஏற்கனவே கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு, இந்த விவகாரம் தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை (Money Laundering) குறித்து விசாரிப்பதற்காக அமலாக்கத்துறை (Enforcement Directorate - ED) சம்மன் அனுப்பியுள்ளது.
நடிகர் ஸ்ரீகாந்த் வரும் அக்டோபர் 28ஆம் தேதியும், நடிகர் கிருஷ்ணா வரும் அக்டோபர் 29ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெறும் இந்த விசாரணையின்போது, நடிகர்கள் இருவரும் கடந்த ஆண்டுகளில் மேற்கொண்டுள்ள நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி ஆவணங்களை (Bank Documents) ஒப்படைக்க வேண்டும் எனச் சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் வாங்கும் விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை அல்லது ஹவாலா பரிவர்த்தனை (Hawala Transactions) நடந்துள்ளதா என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தவுள்ளனர்.
கடந்த ஜூன் 18ஆம் தேதி, போதைப்பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவின் (ANIU) சிறப்புப் படையினர், குற்றம் சாட்டப்பட்ட பிரதீப் குமாருக்குப் போதைப்பொருள் வழங்கியதாகக் கூறப்படும் கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரைக் கைது செய்தனர். அதன் பின்னர், சென்னை போலீசார் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி பிரசாத், பிரசாந்த், நடிகர் ஸ்ரீகாந்த், ஜவஹர், நடிகர் கிருஷ்ணா மற்றும் பயாஸ் அகமது ஆகியோரைக் கைது செய்தனர்.
இந்த விசாரணையில், மொத்தம் 11.5 கிராம் கொகைன், 10.3 கிராம் மெத்தப்பட்டமைன், 2.75 கிராம் MDMA, 2.4 கிராம் OG கஞ்சா மற்றும் 30 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ₹40,000 ரூபாய், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் மூலம் கிடைத்த பணம் என்ற அடிப்படையில், அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கில் கைதாகி இருந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மற்றும் ஜான் ஆகியோர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதீப் குமார், ஜவஹர் மற்றும் பிரசாந்த் ஆகியோர் இன்னும் புழல் சிறையில் உள்ளனர். முன்னதாக, சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று, சிறையில் உள்ள பிரசாந்த், ஜவஹர் மற்றும் பிரதீப் குமார் ஆகியோரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
