திருமண மோசடி புகார்: சமையல் கலை நிபுணர், ஆடை வடிவமைப்பாளர் இடையே 2-வது சுற்று விசாரணை நிறைவு!
திருமண மோசடி புகாரில், சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா ஆகியோர் இரண்டாவது முறையாக இன்று மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொண்டு தன்னை கர்ப்பமாக்கி, பின்னர் துரோகம் செய்தார் என முதலில் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். ஆனால், காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அவர், பின்னர் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, ஏற்கனவே ஒருமுறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இருவரும் ஆணையத்தின் முன் ஆஜராகி தங்களது வாக்குமூலங்களை வழங்கினர்.
விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பின்வருமாறு கூறினார். விசாரணை நடந்து கொண்டே இருக்கிறது. மீண்டும் வெள்ளிக்கிழமை வரச் சொல்லி இருக்கிறார்கள். அதன் பின்னர்தான் முழு விவரம் தெரிய வரும். தற்போது இருவரிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது.
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தபோது விசாரணையில் காலதாமதம் ஏற்பட்டதற்குக் 'காத்திருந்தது அரசியல் தலையீடுதானா?' என்ற கேள்விக்கு, "ஆம், இருக்கலாம்" எனப் பதிலளித்தார். இதன் மூலம், மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்கு அரசியல் தலையீடு இருக்கலாம் என்று ஜாய் கிரிசில்டா மறைமுகமாகக் குற்றஞ்சாட்டினார்.
மகளிர் ஆணையத்தில் 100 சதவீதம் முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாகவும், பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் மகளிர் ஆணையத்தை நாடலாம் என்றும் அவர் தெரிவித்தார். மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடம் பேசினார் எனவும், அதைக் குறித்து வெள்ளிக்கிழமை சொல்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் ஊடகங்களின் கண்ணில் படாமல், ஆணையத்தின் பின் வழியாக வந்து அதே வழியாகத் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
