சேலம் - கோவை நெடுஞ்சாலையில் அச்சுறுத்தல்: சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில், தீபாவளி பண்டிகையின்போது, தங்களது இருசக்கர வாகனங்களின் முன்பக்கம் பட்டாசுகளைப் பொருத்தி, சாலையில் வீலிங் செய்தபடியே வெடிக்க வைத்துச் சாகசம் செய்த 4 இளைஞர்களைப் பெருந்துறை காவல்துறையினர் கைது செய்து, அவர்களது 3 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
சமூக வலைதளங்களில் 'ஹீரோயிசத்தை' வெளிப்படுத்துவதாக நினைத்து இளைஞர்கள் உயர் ரக இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து காட்சிகளைப் பதிவிடுவது வழக்கமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இளைஞர்கள் சிலர் நடத்திய சாகசம், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
அந்த இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தக் காட்சிகளைப் பதிவிட்டதால், அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவிப் பார்ப்போர் மனதைப் பதறச் செய்தது.
இளைஞர்கள் தங்களை அடையாளம் தெரியாமல் இருக்க தலைக்கவசம் அணிந்தும், வாகனங்களின் எண் பலகைகளை மறைத்தும் சாகசங்களைச் செய்து பதிவேற்றம் செய்திருந்தனர்.
சமூக ஆர்வலர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். சமூக வலைதளங்களில் பரவிய இந்த வீடியோவைப் பார்த்த பெருந்துறை காவல்துறையினர், உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.
இன்ஸ்டாகிராம் ஐடியை வைத்து விசாரணை நடத்தியதில், இந்தச் செயல்களில் ஈடுபட்ட ஆகாஷ், சஞ்சய், பிரவீன், கவின் ஆகிய 4 இளைஞர்களைக் காவல்துறையினர் பிடித்தனர்.
இவர்கள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் பெருந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 3 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வீலிங் செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு இது தவறான செயல் என்பதைப் பெருந்துறை காவல்துறையினர் உணர்த்தியதுடன், விழிப்புணர்வும் ஏற்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்.
.jpg)