மும்பை, பெங்களூரு, கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விமானங்கள் பாதிப்பு; முழுப் பாதுகாப்புடன் தரையிறங்குவதால் அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் தகவல்!
சென்னை, அக்டோபர் 21, 2025: வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாகச் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை முதல் மிக கனமழை விட்டுவிட்டுப் பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட கன மேகமூட்டத்தால், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மும்பையிலிருந்து வந்த இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்கள்; பெங்களூரிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் உட்பட, கோயம்புத்தூர், விஜயவாடா, மதுரை, ஹைதராபாத், கொழும்பு, தூத்துக்குடி, போர்ட் பிளேர் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமானங்கள் இந்தத் தாமதத்தைச் சந்தித்தன.
விமானங்கள் தரையிறங்க முயற்சி செய்தபோது, விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து அதற்கான கட்டளை பிறப்பிக்கப்படாததால், இந்த விமானங்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை வானில் வட்டமடித்துவிட்டுக் காலதாமதமாகத் தரையிறங்கின. தற்போது வானில் வட்டமடித்த விமானங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாகத் தரையிறங்கி வருகின்றன.
இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கனமழை மற்றும் அதிக மேகமூட்டம் காரணமாகவே விமானங்கள் தரையிறங்கத் தாமதம் ஆகிறது. பயணிகளின் நலன் கருதி முழுப் பாதுகாப்புடன் விமானங்கள் தரையிறக்கப்பட்டு வருகின்றன.
இதனால் விமானங்கள் தாமதமாவது குறித்துப் பயணிகள் பயப்படத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் பகுதிகளுக்கு அருகில் அடையாறு ஆற்றில் கால்வாய் செல்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.