வேல் குத்தி, நடைபயணம் மேற்கொண்டு வந்த பக்தர்கள்: முருகப்பெருமானின் திரிசூலத்தால் சூரபத்மன் வதம்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை 5:30 மணியளவில் பக்தர்களின் ‘அரோகரா’ முழக்கங்களுக்கு இடையே பிரமாண்டமாக நடைபெற்றது. இந்தச் சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் திரண்டிருந்தனர்.
கடந்த அக்டோபர் 21, 2025ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கந்தசஷ்டி விழா, 6 நாட்கள் விரதம் மேற்கொண்ட பக்தர்களின் பக்திப் பரவசத்துடன் இன்று உச்சக்கட்டத்தை எட்டியது. சூரசம்ஹாரத்தைக் காண ஏராளமான பக்தர்கள் நடைபயணம் மேற்கொண்டு திருச்செந்தூர் வந்தடைந்தனர். மேலும் சிலர் முருகனுக்குக் காணிக்கையாக வேல் கொண்டு அழகு குத்தியும் தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.
இன்று (அக். 27, 2025) கோவில் கருவறை அதிகாலை 1 மணியளவில் பக்தர்களுக்குத் திறக்கப்பட்டு, 1:30 மணியளவில் விஸ்வரூப தீபாராதனை, அபிஷேகம், யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்ந்து மாலை 5:30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், பல்வேறு அவதாரங்களை எடுத்த சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முருகப் பெருமான் தனது திரிசூலத்தால் சூரபத்மனை வதம் செய்தபோது, பக்தர்கள் ‘வெற்றி வேல் வீர வேல்’, ‘அரோகரா’ உள்ளிட்ட நாமங்களை முழக்கமிட்டு முருகனை வழிபட்டனர்.
சூரபத்மனை முருகன் கொன்றபோது, அவன் மாமரமாக உருவம் எடுத்தான். இந்த மரத்தை முருகன் தனது வேல் கொண்டு இரண்டாகப் பிளந்தார். மாமரத்தின் ஒரு பாதியைத் சேவலும், மறு பாதியை மயிலாகவும் மாற்றிய முருகன், சேவலைத் தனது போர்க்கொடியாகவும், மயிலைத் தனது வாகனமாகவும் மாற்றினார் என்பது ஐதீகமாகும்.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, பக்தர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சிறப்பான முறையில் செய்திருந்தது.
சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 1, 2025ஆம் தேதி வரை அந்தந்த நாட்களில் திருக்கல்யாணம், தங்கமயில் வாகனம், ஊஞ்சல் உற்சவம், மஞ்சள் நீராட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
