பிரபல ரவுடி இலாமல்லியின் பேரன் கோகுல் சிக்கினார்; கத்தி பறிமுதல் - ரவுடிகளைப் போலப் புகைப்படம் வெளியிட்டு மிரட்டியதாகக் குற்றச்சாட்டு!
சென்னையில் உயிரிழந்த பிரபல ரவுடி இலாமல்லியின் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சமூக வலைதளத்தில் "வடசென்னை கிங்ஸ்" என்ற பெயரில் புகைப்படங்களைப் பதிவிட்டு, அப்பகுதியில் மிரட்டல் தொனியில் கருத்துகளை வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, வியாசர்பாடி போலீசார் அந்த இளைஞரைக் கைது செய்தனர்.
வியாசர்பாடி கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த கோகுல். இவர், உயிரிழந்த பிரபல ரவுடி இலாமல்லியின் பேரன் மற்றும் சரித்திர பதிவேடு ரவுடி மோகன்தாஸின் மகன் ஆவார். கோகுல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் "வடசென்னை கிங்ஸ்" என்ற பெயரில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படத்தில் அவரது பாட்டி இலாமல்லி, கோகுல் மற்றும் சில ரவுடிகள் இருப்பது போன்ற படங்களைப் பதிவிட்டு, "இனி வியாசர்பாடியில் நாங்க தான்" என்ற ரீதியில் சில விரும்பத்தகாத கருத்துக்களை அதில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்துகள், அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தின.
இது குறித்து வியாசர்பாடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. ரகசியத் தகவலின் அடிப்படையில் வியாசர்பாடி போலீசார் இன்று காலை கோகுலைக் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கோகுல் மீது வழக்குப் பதிவு செய்த வியாசர்பாடி போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமூக வலைதளங்களைப் பயன்படுத்திப் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
