தி.மு.க. செயல்படாத, விளம்பர அரசு; அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் ஒன்றும் தெரியவில்லை - நெல் கொள்முதல் விவகாரத்தில் முதல்வர் மீது கடும் குற்றச்சாட்டு!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைப் பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்த அ.தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தி.மு.க. அரசு மீது சரமாரிக் குற்றச்சாட்டுகளை வைத்ததுடன், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தம்முடைய தலைமையில்தான் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கருக்குக் குருவை சாகுபடி செய்யப்பட்டும், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் உள்ளனர். 8,000 ஏக்கருக்கு மேல் மழை நீரில் மூழ்கியுள்ளது.
குறைவான கொள்முதல் நிலையங்களே செயல்படுகின்றன. இதில் நிறைய விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. தி.மு.க. அரசாங்கம் ஒரு செயல்படாத அரசாங்கமாக உள்ளது. இவர்கள் திருந்துவதுபோல் இல்லை. விளம்பர அரசாகவே தி.மு.க. அரசு உள்ளது.
எவ்வளவு சாகுபடி செய்துள்ளார்கள், எவ்வளவு கொள்முதல் ஆகும் என்பது அரசாங்கத்திற்குத் தெரியும். அதற்குத் தமிழக அரசு தயாராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அமைச்சருக்கும் ஒன்றும் தெரியவில்லை, முதலமைச்சருக்கும் ஒன்றும் தெரியவில்லை" என்று தமிழக அரசைச் சாடினார். நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு ஓராண்டில் ஐந்து முறை நிர்வாக அதிகாரி மாற்றப்பட்டுள்ளார்.
ஒரு நிறுவனத்திடம் மொத்த லாரி டெண்டரையும் கொடுத்ததால், அவர்களால் நெல்லை நகர்வு செய்ய முடியவில்லை. "ஜெயலலிதா ஆட்சி இருக்கும்போது, அந்தந்த மாவட்ட லாரிகளுக்கு வாய்ப்பு கொடுத்துத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ரசாங்கத்தின் தோல்வியால் தான் விவசாயிகளின் நெல்மணிகளைச் சாலையில் கொட்டி காயவைக்கும் அவல நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள். இதற்கு யார் பதில் சொல்வார்? 2026-ல் மக்கள் பதில் சொல்வார்கள்.
11 லட்சம் மெட்ரிக் டன் நெல்மணிகளை அரைக்க 621 அரவை ஆலைகள் உள்ளன. அவர்களுக்குரிய மின்சார அதிகாரத்தைக் கொடுத்திருந்தால், இந்த நேரத்தில் அரைத்து முடித்திருக்க முடியும்.
மத்திய குழு முறையாக ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு என்ன செய்ய முடியுமோ, அதனைச் செய்ய வேண்டும். ஏக்கருக்கு 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. அதற்கான உரிய நிவாரணத்தை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் யார் தலைமையில் ஆட்சி அமையும் எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு வி.கே. சசிகலா கூறியதாவது,
அம்மாவுடைய ஆட்சி தான் அமையும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மக்களுடைய ஆதரவோடு நிச்சயமாக அம்மாவுடைய ஆட்சி அமையும். ஜெயலலிதா அம்மா எப்படி இருந்தார்களோ, அதேபோல் தான் நான். மாற்றி மாற்றிப் பேசமாட்டேன். யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான்.
நான் இருந்திருந்தால், இதுபோல் சம்பவம் நிகழ்ந்திருக்காது. எங்கள் ஆட்சியில் இருக்கும் மந்திரி தவறு செய்தால், அவர் ஆட்சியில் இருக்க முடியாது. தி.மு.க.வில் மந்திரிகளைப் போர்வை போர்த்திப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று குற்றஞ்சாட்டினார்.
வரும் 2026 தேர்தலில் உங்கள் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையுமா என்ற கேள்விக்கு, நீங்களும் நானும் தீர்மானிக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள வாக்களிக்கும் மக்களே தீர்மானிக்க முடியும். நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நிச்சயமாக என்னுடைய தலைமையில்தான் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்," என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
 

