குருவை அறுவடை இறுதிக் கட்டம்; மழையாலும், கொள்முதல் தாமதத்தாலும் விவசாயிகள் வேதனை; உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை நெல் அறுவடைப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொள்முதல் நிலையங்களில் நிலவும் தாமதம் மற்றும் மழையின் காரணமாகச் சாலையில் கொட்டிக் கிடக்கும் நெல்மணிகளை, அ.தி.மு.க முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா இன்று நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பின்னையூர் கிராமத்தில், குருவை சாகுபடி அறுவடை செய்யப்பட்டும், விற்பனை செய்ய முடியாமல் சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகள்.
அறுவடை செய்த நெல்மணிகளை உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மேலும், கொள்முதல் நிலையங்களில் நிலவும் தாமதத்தாலும், எதிர்பாராத மழை காரணமாகவும் நெல்மணிகள் சேதமடையும் அபாயத்தில் உள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் சசிகலாவிடம் தெரிவித்தனர்.
டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க, கொள்முதல் நிலையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், நெல்மணிகளை உடனடியாகக் கொள்முதல் செய்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றும் வி.கே. சசிகலா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
