முன்னர் வன மருத்துவரைத் தாக்கியதால் தற்காலிகமாக நின்ற 'ஆபரேஷன் ரோலக்ஸ்' வெற்றி; பொள்ளாச்சி டாப்ஸ்லிப் முகாமுக்குக் கொண்டு செல்லத் திட்டம்!
கோவை, அக்டோபர் 17, 2025: கோவை மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரக் கிராமங்களான நரசிபுரம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தியும், மனிதர்களையும் தாக்கியும் வந்த 'ரோலக்ஸ்' என்று உள்ளூர் மக்களால் பெயரிடப்பட்ட ஆண் காட்டு யானையை, இன்று அதிகாலை வனத் துறையினர் வெற்றிகரமாகப் பிடித்துள்ளனர்.
ஆபரேஷன் 'ரோலக்ஸ்' பின்னணி:
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரக் கிராமங்களில் இந்தப் பிரம்மாண்ட ஆண் யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இந்த யானையைப் பிடிக்கச் சில மாதங்களுக்கு முன்பு முயற்சி நடந்தது. பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து நரசிம்மன், முத்து என்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன.
செப்டம்பர் 19-ஆம் தேதி, யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயன்ற வன கால்நடை மருத்துவர் விஜயராகவனை அந்த யானை தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். இதனால் 'ஆபரேஷன் ரோலக்ஸ்' தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், கொண்டு வரப்பட்ட நரசிம்மன், முத்து ஆகிய இரண்டு கும்கி யானைகளுக்கும் மதம் பிடித்ததால், பாதுகாப்புக்காக அவை மீண்டும் கோழிக்கமுத்தி முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டன. அவற்றிற்குப் பதிலாகச் சின்னத்தம்பி என்ற கும்கி யானை கோவைக்குக் கொண்டு வரப்பட்டது (எனினும் இறுதிக் கட்டத்தில் வேறு மூன்று யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன).
யானையைப் பிடித்தது எப்படி?
வனத் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
ரோலக்ஸ் யானை மிகவும் 'சென்சிட்டிவ்' ஆக இருந்தது. அதாவது, சிறிய சத்தம் அல்லது வெளிச்சம் கேட்டாலும் உடனே ஓடிவிடும் நிலையில் இருந்தது. யானையைப் பிடிக்கச் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, 25 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. யானை காட்டை விட்டு வெளியே வரும் வழி, விவசாய நிலங்களுக்குச் சென்று மீண்டும் காட்டுக்குள் திரும்பும் பாதை ஆகியவை சரியாகக் கணிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (அக். 17, 2025) அதிகாலை 2 மணி அளவில் யானைக்கு மயக்க மருந்து (dart) செலுத்தி, அது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. யானையைக் கட்டுப்படுத்தவும், லாரியில் ஏற்றவும் கபில்தேவ், வாசிம் மற்றும் பொம்மன் ஆகிய மூன்று கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டது.
பிடிபட்ட 'ரோலக்ஸ்' யானை தற்போது பொள்ளாச்சி டாப்சிலிப்பில் உள்ள வரகளியார் முகாமிற்கு கொண்டு செல்லப்படுகிறது.