அக். 27 முதல் 29 வரை கொடிசியா, டவுன்ஹால், பேரூர் உட்பட 5 பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வரும் அக். 28-ஆம் தேதி கோயம்புத்தூருக்கு வருகை தர உள்ளதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவையில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV) பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாகக் கோவை வரும் சி.பி. ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சிகள்,
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. Coimbatore Citizen Forum அமைப்பின் சார்பில் கொடிசியா வளாகத்தில் நடைபெறும் பாராட்டு நிகழ்வில் பங்கேற்கிறார்.
டவுன் ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.
பேரூர் ஆதீன மட வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கோவையில் உள்ள நிகழ்வுகளைத் தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் திருப்பூர் செல்கிறார்.
குடியரசுத் துணைத் தலைவரின் வருகையையொட்டி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக அக். 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை, பின்வரும் பகுதிகள் சிவப்பு மண்டலமாக (Red Zone) மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அவர்களால் அறிவிக்கப்பட்டு, ட்ரோன்கள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடிசியா
ரெட் ஃபீல்ட்ஸ்
டவுன்ஹால்
பேரூர்
மருதமலை
மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை மீறி ட்ரோன் அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்களைப் பறக்க விடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
