பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை வழக்கு; வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஜாமீன்!
சென்னை, அக்டோபர் 16: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஓராண்டுக்கும் மேலாகச் சிறையில் இருந்த சதீஷ்குமார் மற்றும் சிவா ஆகிய இருவரும், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை ஜாமீனை அடுத்து இன்று (அக். 16) புழல் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்துச் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடி நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட 27 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் நாகேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்தார். மேலும், 2 பேர் வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளனர்.
போலீசார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமீன் வழங்கியது ஏன்?
இந்த வழக்கில் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சதீஷ்குமார் மற்றும் சிவா ஆகியோர், தாங்கள் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கோரி முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
நீதிமன்ற உத்தரவு:
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் இருந்து வெளியே வந்தனர். ஜாமீன் நிபந்தனையாக, மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10 மணிக்கு வழக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
in
தமிழகம்