தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே அதிர்ச்சி: புகார் அளித்தும் கண்டுகொள்ளாத தலைமையாசிரியை மீது நடவடிக்கை - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில், ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், விசாரணை நடத்தியபோது மேலும் ஆறு மாணவிகளுக்குத் தொல்லை அளித்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இது தொடர்பாக, ஆசிரியர் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த தலைமையாசிரியை என இருவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.
பட்டுக்கோட்டை அருகே எட்டுப்புளிக்காடு பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி. ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் பாஸ்கர் (53). ஆசிரியர் பாஸ்கர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரை வகுப்பறையில் எழுந்து நின்று படிக்கச் சொல்லியுள்ளார். அப்போது அவர் அந்த மாணவிக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை அளித்துள்ளார்.
மாணவி இது தொடர்பாகப் பெற்றோரிடம் அழுது கூறியதை அடுத்து, மாணவியின் பெற்றோர் உடனடியாகப் பள்ளியின் தலைமையாசிரியையான விஜயா (55) என்பவரிடம் புகார் அளித்துள்ளனர். மாணவியின் பெற்றோர் புகார் அளித்தபோதும், தலைமையாசிரியை விஜயா உரிய நடவடிக்கை எடுக்காமல், அதைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார் எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேற்று (25.10.2025) பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியர் பாஸ்கரைக் கைது செய்ய வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியர் பாஸ்கரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆசிரியர் பாஸ்கர் அவரது வகுப்பில் படிக்கும் மேலும் ஆறு மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இது தொடர்பாக, ஏற்கனவே பல மாணவிகளின் பெற்றோர் தலைமையாசிரியை விஜயாவிடம் புகார் அளித்தும், அவர் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் பாஸ்கர் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த தலைமையாசிரியை விஜயா ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
