கரூரில் நீதி கோரி நடைப்பயணம் தொடக்கம்: வேளாண்மை பாதிப்பு, அத்திக்கடவு திட்டம் தோல்வி குறித்துக் கோவை விமான நிலையத்தில் பா.ம.க. தலைவர் பேட்டி!
கோவை, அக். 25:கரூர் மாவட்டத்தில் 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' என்ற தலைப்பில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேற்கொள்ள இருக்கும் நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக இன்று கோவை வந்தடைந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக $2.5$ இலட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கிப் பெரும் சேதம் அடைந்துள்ளன. டெல்டா மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பருவமழைக்கு முன்பே மழைநீர் வெளியேற அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். விளம்பரங்களுக்குச் செலவழித்த அரசு, இதில் கவனம் செலுத்தவில்லை. விவசாயிகள் $6.5$ இலட்சம் ஏக்கரில் பயிர் செய்துள்ள நிலையில், அரசு $18$ டன் நெல் கொள்முதல் செய்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு வெறும் $5$ இலட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்துள்ளது. ஈரப்பதம் அதிகமாக இருந்ததைக் காரணம் காட்டி நெல் கொள்முதல் செய்ய அரசு தயாராக இல்லை.
டெல்டா மாவட்டத்தில் நெல் சேகரிக்கத் தேவையான அடிப்படை கட்டுமானம், இலட்சக்கணக்கான நெல்லைச் சேமிக்கும் கிடங்குகள் (குடோன்கள்) ஏன் உருவாக்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பினார். திமுக அரசின் இந்தச் செயலால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு, மிகுந்த கோபத்தில் உள்ளனர். வேளாண் மற்றும் உணவுத் துறை அமைச்சர்கள் அளிக்கும் விளக்கங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. நெல் கொள்முதல் செய்ய திமுக அரசுக்குத் 'துப்பு' இல்லை.
தமிழகத்தின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்பட்டு, கோடிக் கணக்கில் ஊழல் நடந்து வருகிறது. அரசு இதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறது. "தினமும் ஆயிரம் லாரிகளில் கோடிக் கணக்கான கனிம வளங்கள் திருடப்படுகின்றன. இந்தக் கொள்ளைக்கு தென் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிதான் காரணம். கனிமவளக் கொள்ளையின் 'காட்பாதர்' திமுகவில்தான் இருக்கிறார். அவர் அப்பாவி போன்று இருக்கிறார். விரைவில் அவர் யார் என்பதை வெளியே சொல்வோம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
அண்டை மாநிலத்தில் கனிமவளத் திருட்டைத் தடுக்கச் சட்டம் இருக்கும்போது, தமிழகத்தில் ஏன் சட்டம் இல்லை? இதை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏன் இன்னும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் இருக்கிறார்கள்? இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். இது தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகம் என்று சாடினார்.
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் ஏன் இன்னும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின்? கூட்டணி கட்சிகளான வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை போன்ற சமூக நீதி பேசும் தலைவர்கள் கூட்டணிக்காகவா? சீட்டுக்காகவா? அல்லது பயமா? என்று ஏன் அமைதி காக்கிறார்கள் எனப் பா.ம.க. தலைவர் கேள்வி எழுப்பினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் சமூக நீதி நிலைநாட்ட முடியும். வெள்ளைக்காரன் எடுத்த கணக்கெடுப்பை வைத்து இன்னமும் ஆட்சி ஓட்டிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்; சாதி ஒழிப்புக்கு இதுவே தொடக்கப் புள்ளியாக இருக்கும்.
பறவைகள், தெரு நாய்கள், மாடுகள் குறித்துக் கணக்கெடுப்பு நடத்தும் நீங்கள், ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கவில்லை? பெரியார், கருணாநிதி பெயரைப் பயன்படுத்த முதல்வர் ஸ்டாலினுக்குத் தகுதி இல்லை என்று ஆவேசமாகக் கூறினார். அத்திக்கடவு அவிநாசி திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. 1050 ஏரிகளுக்குத் தண்ணீர் சென்றிருக்க வேண்டும். ஆனால், 20% ஏரிகளுக்கு மட்டுமே தண்ணீர் சென்றுள்ளது. திட்டம் 2 என்று அறிவித்துக் குறைகளைச் சரிசெய்து பணியைத் தொடங்க வேண்டும்.
கடந்த 4.5 ஆண்டுகளாக நீர் மேலாண்மை குறித்து முதல்வர் ஸ்டாலின் எந்தத் திட்டத்தையும் செய்யவில்லை. நதி நீர்ப் பிரச்சினைகளுக்குக் காமராசர் காலத்தில் இருந்த நிலுவையில் தீர்வு காண வேண்டும். இருக்கும் நான்கு மாதத்தில் எதுவும் செய்யமாட்டார்கள்; விளம்பரம் மட்டுமே செய்வார்கள்.
குடும்ப விவகாரம் குறித்த கேள்விக்கு பதில்அரசியல் கேள்விகளுக்கு ஆவேசமாகப் பதிலளித்த அன்புமணி ராமதாஸ், அப்பா (ராமதாஸ்) - மகன் பிரச்சினை குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அது எனக்கு இருப்பது உட்கட்சி விவகாரம், கருத்து சொல்ல விரும்பவில்லை என்று பதிலளித்தார். வெளியே சண்டை போடுவதும், உள்ளே இணைந்து இருப்பதும் உங்கள் மாஸ்டர் பிளான் (Master Plan) தானே? என்ற கேள்விக்கு, ஐயா ஆளை விடுங்கள் என்று கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
