சென்னையிலிருந்து 480 கி.மீ தொலைவில் புயல்: திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை!
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள 'மோன்தா' புயல் (Cyclone Montha), நாளை (அக்டோபர் 28, 2025) காலை தீவிர புயலாக வலுப்பெற்று, அன்றைய தினம் மாலை அல்லது இரவில் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் மஜ்லி பட்டினம் அல்லது காக்கிநாடா அருகே கரையை கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD Chennai) தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா, இன்று (அக்டோபர் 27, 2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது புயலின் தற்போதைய நிலை மற்றும் நகர்வு குறித்து விளக்கமளித்தார்.
மோன்தா புயல், இன்று (அக். 27) காலை 11 மணி நிலவரப்படி, கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 17 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் தற்போது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில்:
சென்னைக்குக் கிழக்கே சுமார் 480 கி.மீ தொலைவிலும், ஆந்திராவில் இருந்து 530 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 560 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
புயல் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நகர்ந்து நாளை (அக். 28) காலை தீவிர புயலாக வலுபெறும் என்றும், பின்னர் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடற்கரையில் கரையை கடக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கரையை கடக்கும் சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
மோன்தா புயலின் காரணமாக, தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (அக். 28, 2025) திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மிக கனமழை பெய்யும்.
சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்குக் கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 29, 2025 முதல் நவம்பர் 2, 2025 வரை தமிழ்நாட்டில் மிதமான மழை மட்டுமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)