இயல்பை விட 58% அதிக மழை பதிவு; திருநெல்வேலியில் 254% மழை; மீனவர்கள் கரை திரும்பத் தென் மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்!
சென்னை, அக்டோபர் 19, 2025: வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தீபாவளிப் பண்டிகையான நாளை (அக்டோபர் 20, 2025) தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தென் மண்டல வானிலை மைய தலைவர் அமுதா எச்சரித்துள்ளார்.
தீபாவளி கனமழை (அக். 20): வடகிழக்கு தமிழகம் முழுவதும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அக்டோபர் 20, 2025 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தெற்கு அந்தமான் - தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இது அக்டோபர் 21-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடலில் உருவாகும் தாழ்வுப் பகுதியால், சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆழ்கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் அக்டோபர் 21-ஆம் தேதி காலைக்கு முன்பே கரைக்குத் திரும்ப வேண்டும் எனத் தென் மண்டல வானிலை மைய தலைவர் அமுதா அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அக்டோபர் 24-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது மக்கள் பாதுகாப்புடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அக்டோபர் 1, 2025 முதல் தற்போது வரை தமிழகத்தில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பை விட அதிகம்: இது இயல்பை விட 58 சதவீதம் அதிகமாகும். குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இதுவரை சுமார் 254 சதவீதம் மழை பதிவாகியுள்ளது.