5 ஆண்டு அனுபவ விதி மீறல்; காவல்துறை விசாரணையில் உள்ள ஒருவருக்கு அரசு டெண்டர் வழங்கியது ஏன்? - வழக்கறிஞர் கண்ணதாசன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு!
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா திருமண மோசடி புகார் போலீசில் கொடுத்து இருந்தார். அது விசாரணையில் இருக்கிறது. மேலும் இந்த புகார் குறித்து மாநில மகளிர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் பெரும் பேசுப்பொருளாகி இருக்கிறது.
இந்த நிலையில் அரசு டெண்டரை விதிகளை மீறி மாதம்பட்டி ரங்கராஜ் பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டு எழுந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.கண்ணதாசன் என்பவர் முதல்வர் தனிப்பிரிவு, தலைமைச் செயலாளர், தமிழ்நாடு இல்லம் குடியுரிமை ஆணையர் ஆகியவற்றிற்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக கண்ணதாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
டெல்லியில் தமிழ்நாடு அரசின் இல்லம் உள்ளது. அரசு நடத்தி வரும் இந்த இல்லத்திற்கு முதல்வர் முதல் அமைச்சர்கள், எம்பிக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வந்து தங்கி செல்வது வழக்கம். இந்த இல்லத்தில் கேண்டீன் நடத்துவதற்காக டெண்டரை தமிழக அரசு வெளியிட்டது. அதற்கு மாதம்பட்டி ரங்கராஜும் விண்ணப்பித்து இருந்தார்.
இதனை அறிந்து அவரது விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என அந்த துறை செயலாளரிடம் மனு கொடுத்தோம். ஆனால் விதிகளை மீறி மாதம்பட்டி ரங்கராஜுக்கு அந்த இல்லத்தில் உணவகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் உணவகம் நடத்தி இருக்க வேண்டும், 120 பேர் சாப்பிட்டு இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அந்த விதிகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் உட்பட்டு இல்லை. மேலும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கி அது குறித்த விசாரணை இன்னும் முடியவில்லை. காவல்துறை விசாரணை வளையத்திற்குள் இருக்கும் ஒருவருக்கு அரசு டெண்டர் வழங்கி இருப்பது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
எனக்கும் அந்த புகார் கொடுத்த பெண்ணிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் தரப்பு வழக்கறிஞரும் இல்லை. மாதம்பட்டி ரங்கராஜுக்கும் விரோதம் இல்லை. நான் அந்த துறை செயலாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு (அதாவது: போன் செய்து) விதிகளை மீறி மாதம்பட்டி ரங்கராஜுக்கு கொடுக்கக்கூடாது என்று கூறினேன். அவரும் கொடுக்க மாட்டோம் என்று கூறினார். ஆனால் பொய்யாக தெரிவித்து விட்டு அந்த டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்" என்று வழக்கறிஞர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் விளக்கம் பெற முயன்றபோது தொடர்பை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
