பிரதீப் - மமிதா கெமிஸ்ட்ரி, சரத்குமாரின் மிரட்டலான நடிப்பு, சாய் அபயங்கரின் இசை - படத்துக்கு பலம்!
சென்னை, அக்டோபர் 17: இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் மற்றும் மமிதா நடிப்பில் வெளியாகி உள்ள 'டியூட்' திரைப்படம், உறவுச் சிக்கல், காதல், மற்றும் எதிர்பாராத ஆணவக் கொலைப் பின்னணி எனப் பரபரப்பான திரைக்கதையுடன் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரைக்கதை சுருக்கம்:
மாமா மகள், அத்தை பையன் உறவுமுறையில் உள்ள பிரதீப்பும் மமிதாவும் தான் படத்தின் மையக்கதாபாத்திரங்கள். மமிதா பிரதீப்பிடம் காதலைச் சொல்லும்போது, பிரதீப்புக்குக் காதல் உணர்வு வரவில்லை. பிறகு பிரதீப்புக்குக் காதல் வரும்போது, மமிதா வேறொரு பையனுடன் காதலில் கமிட்டாகி இருக்கிறார்.
இந்தச் சிக்கல் தெரியாமல் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆக, மமிதாவின் தந்தையான அமைச்சர் சரத்குமார் மூலமாகக் கதைக்குள் திடீரென ஓர் ஆணவக் கொலை ட்விஸ்ட் நுழைகிறது. வேறு வழியே இல்லாமல் பிரதீப்பும் மமிதாவும் திருமணம் செய்துகொள்ளும் கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள்.
கடைசியில், மமிதாவின் கணவன் ஒருத்தன், மமிதாவின் பிள்ளைக்குத் தந்தை ஒருத்தன் என்ற சிக்கலான திரைக்கதை, கிளைமாக்ஸில் என்னவாகிறது என்பதே 'டியூட்' திரைப்படத்தின் மையக் கதை.
விமர்சனப் பார்வை:
படத்தின் முதல் பாதியைப் பார்க்கும்போது தியேட்டரே வெடித்துச் சிதறும் வகையிலான 'தியேட்டரிக்கல் ப்ளாஸ்ட்டாக' உள்ளது. ரசிகர்களின் ஆரவாரம் சிறிதும் குறையவில்லை. குறிப்பாக, இன்டர்வெல் காட்சி அதகளம். இரண்டாம் பாதி முழுக்கச் சிக்கலான விஷயங்களை மையமாகக் கொண்டுள்ளது. இந்தச் சிக்கல்கள் படத்தின் ஓட்டத்திற்கு நெகட்டிவ் ஆகாமல் பார்த்துக்கொண்டதில் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பெரும் வெற்றி பெற்றுள்ளார். பிரதீப் தனது வழக்கமான ஸ்டைல் மற்றும் மேனரிசத்துடன் ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்துள்ளார். அவருடன் மமிதாவின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது.
மமிதாவின் அப்பா கேரக்டரில் வரும் சரத்குமார் நடிப்பில் மிரட்டலும், எமோஷனலும் கலந்த ஒரு நடிப்பை வெளிப்படுத்தி, படத்துக்குச் செம்மையாகப் பல்ஸ் கொடுத்துள்ளார். சாய் அபயங்கர், கோலிவுட்டின் அடுத்த 'ராக் ஸ்டார்' என நிரூபித்துள்ளார். படத்தின் பாடல்கள் (சாங்ஸ்) மற்றும் பின்னணி இசை (BGM) எல்லாமே 'நச்' ரகமாக அமைந்துள்ளது. மொத்தத்தில், உணர்வுபூர்வமான சிக்கல்களையும் பரபரப்பான ட்விஸ்ட்டுகளையும் சமநிலையுடன் கையாண்ட ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக 'டியூட்' அமைந்துள்ளது.