கிருஷ்ணகிரி செம்பரசனப்பள்ளியில் 2-ம் ஆண்டு போட்டிக்குத் தீவிரம்; ஐபிஎல் பாணியில் 8 அணிகளுக்காக 300 வீரர்களுக்கு ஏலம் நடைபெற்றது!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த செம்பரசனப்பள்ளி கிராமத்தில் நடைபெறவுள்ள 2-ம் ஆண்டு மினி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம், சூளகிரியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஏலத்தைத் தொடங்கி வைத்த அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.வுமான கே.பி. முனுசாமி, அடுத்தாண்டு போட்டிக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைத்துத் தரப்படும் என்று உறுதியளித்தார்.
செம்பரசனப்பள்ளி கிராமத்தில் இந்த ஆண்டு 8 அணிகள் பங்கேற்ற மினி ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான (2-ம் ஆண்டு) போட்டிகளை நடத்த விழா கமிட்டியினர் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். இந்தத் தொடருக்கான வீரர்கள் ஏலம் சூளகிரி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 300 வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர். ஒவ்வொரு அணிக்கும் தலா 30,000 புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் 15 வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் என 8 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தனித்தனி மேஜைகளில் அமர்ந்து, ஏல நடவடிக்கைகளைத் தத்ரூபமாக ஐபிஎல் போட்டிகளைப் போலவே நடத்தினர்.
இந்த வீரர்கள் ஏல நிகழ்வை அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஐபிஎல் போட்டிகளை, தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடத்த முயற்சி செய்து வரும் இளைஞர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று பாராட்டினார்.
மேலும், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். "அடுத்தாண்டு மினி ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்குள், அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைத்துத் தரப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்வதாக" அவர் உறுதியளித்தார்.
கிரிக்கெட்டில் திறமையான உள்ளூர் வீரர்களைப் பிரபலப்படுத்தவும், ஐபிஎல் கனவை ஓரளவிற்கு நிறைவேற்றும் விதமாகவும் இந்தக் கோலாகலமான மினி ஐபிஎல் போட்டிகள் திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
