'America First' கொள்கை இப்போது 'America Alone' ஆக மாறிவிட்டது: அமெரிக்காவின் முன்னாள் வர்த்தகச் செயலர் ஜினா ரைமாண்டோ எச்சரிக்கை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக மற்றும் வெளியுறவுக் கொள்கைகள், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடனான அமெரிக்காவின் கூட்டணியைப் பலவீனப்படுத்துகிறது என்றும், இது ஒரு "பெரிய தவறு" என்றும் அமெரிக்காவின் முன்னாள் வர்த்தகச் செயலர் ஜினா ரைமாண்டோ கடுமையாகச் சாடியுள்ளார்.
ஹார்வர்ட் கென்னடி ஸ்கூல் ஆஃப் பாலிடிக்ஸில் பேசிய ரைமாண்டோ, ட்ரம்ப் நிர்வாகத்தின் 'America First' என்ற கொள்கை இப்போது ஒரு பேரழிவை ஏற்படுத்தும் 'America Alone' என்ற கொள்கையாக மாறிவிட்டதாக விமர்சித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "நாம் இந்தியாவுடனான உறவில் ஒரு பெரிய தவறு செய்கிறோம் என்று நான் நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டு, ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
ட்ரம்ப் நிர்வாகம் நமது அனைத்து நட்பு நாடுகளையும் கோபப்படுத்திவிட்டது. ஒரு அரசியல்வாதியாக, நமது நட்பு நாடுகளை விட்டு விலகுவது அமெரிக்காவை பலவீனமாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் சமீபத்தில் இந்தியப் பொருட்களின் மீது 50% வரியை விதித்தது. இதில் 25% வரி ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்குவதற்கு அபராதமாக விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு வரி விதிப்பு மூலம் பதட்டமான சூழல் நிலவும் நிலையில், ரைமாண்டோவின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. அவர், அமெரிக்கா அதன் நட்பு நாடுகளிடம் ஆணவத்துடன் நடந்துகொள்வதாகவும், உலக நாடுகள் அமெரிக்காவை மீண்டும் வந்து உறவைச் சரிசெய்வதற்காகக் காத்துக்கொண்டிருக்காது என்றும் எச்சரித்தார். மேலும், உலகளாவிய பிரச்சினைகளைச் சமாளிக்க, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளுடன் வலுவான உறவுகள் அத்தியாவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
