சென்னையில் மகனைக் கொன்று மனைவியைக் கழுத்தறுத்த சம்பவம்: பாதுகாப்புப் பிரிவு பணத்தைக் கையாடல் செய்த கொடூரம் அம்பலம்!
ஷேர் மார்க்கெட்டில் பெருமளவு பணத்தை இழந்ததால், சென்னையை உலுக்கிய கொடூர சம்பவமாக, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தனது 7 வயது மகனின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, மனைவியைக் கழுத்தறுத்து விட்டு பின்னர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று நடந்துள்ளது.
சென்னை அண்ணாநகர் 18வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நவீன் கண்ணா. இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய பாதுகாப்பு கட்டுப்பாட்டு கணக்காளர் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி நிவேதிதா, தெற்கு ரயில்வேயின் லோகோ அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு லவின் கண்ணன் (7) என்ற மகன் இருந்தான்.
இன்று காலை நவீன் கண்ணா தனது தாயாருக்குப் புதிய எண்ணில் இருந்து போன் செய்து, மனைவி, மகன் இருவரும் நீண்ட நேரம் தூங்குவார்கள் என்றும், அவர்களை பதினோரு மணி வரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் நிவேதிதாவின் தாயார் இந்திராவுக்குச் சந்தேகம் ஏற்பட, அவர் நவீனின் தாயாரைத் தொடர்புகொண்டுள்ளார். பலமுறை கதவைத் தட்டியும் கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சிறுவன் லவின் கண்ணன் கழுத்தை துணியால் இறுக்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தான். மனைவி நிவேதிதா கழுத்தில் பலத்த காயத்துடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.
உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ரத்த காயத்துடன் இருந்த நிவேதிதாவை மீட்ட அக்கம் பக்கத்தினர், குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்ததாகவும், பெண் கை, கழுத்தில் வெட்டுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த திருமங்கலம் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில், மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் நிவேதிதா தனது மாமியாரிடம், "ஷேர் மார்க்கெட்டில் முதலீடு நஷ்டமாகி விட்டது, அதனால் மூன்று பேரும் செத்து விடலாம் என்று முடிவு செய்துவிட்டோம், அதனால் தங்களைக் காப்பாற்ற வேண்டாம்" என்று கூறியது தெரிய வந்தது.
இந்த நிலையில், கணவர் நவீன் கண்ணா தனது செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் தொடர் விசாரணையில், நவீன் கண்ணா வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்ததில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவீன் கண்ணா தான் பணியாற்றி வந்த மத்திய கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கோடிக்கணக்கிலான பணத்தைக் கையாடல் செய்து ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ததாகவும், அவை முழுவதும் நஷ்டமடைந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நவீன் தனது மனைவியைக் கழுத்தை அறுத்து விட்டு மகனைக் கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிறுவன் லவின் கண்ணன் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் தடயவியல் துறை உதவியுடன் தடயங்களைச் சேகரித்து, நவீன் - நிவேதிதா ஆகியோரின் செல்போன்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
