நடிகர் சிம்புவின் 'அரசன்' படக் காட்சியைப் பயன்படுத்தி அவதூறு: சிபிஐ-யின் கவனத்திற்குக் கொண்டு சென்ற தமிழக வெற்றிக் கழகம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திமுக பெயரில் உள்ள சமூக வலைதளப் பக்கம் ஒன்று அவதூறு பரப்புவதாகக் கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) மாணவரணி நிர்வாகி ஒருவர் சிபிஐயிடம் புகார் அளித்துள்ளார்.
த.வெ.க.வின் மாணவரணி வடசென்னை நிர்வாகியான பிரேம்குமார் என்பவர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து வரும் "அரசன்" திரைப்படத்தின் தொடர்பான ஒரு காட்சியானது பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காட்சியைப் பயன்படுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை அவதூறு செய்யும் வகையிலும், மேலும் சிபிஐ விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது பொதுமக்களைத் திசை திருப்பும் வகையிலும் திமுக பெயரில் உள்ள சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சிபிஐ உடனடியாகக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் த.வெ.க. மாணவரணி நிர்வாகி பிரேம்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் சிபிஐ தலைமையகத்தின் ட்விட்டர் (X) பக்கத்தை இணைத்துச் சமூக வலைதளம் மூலமாகப் புகார் அளித்துள்ளார்.
மேலும், இந்தக் காட்சி பயன்படுத்தப்பட்டதற்குத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் நடிகர் சிம்பு ஆகியோரின் சமூக வலைதளப் பக்கங்களையும் இணைத்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
