தேசியப் பறவைகள் உயிரிழந்த சம்பவம் குருவிகுளம் பகுதியில் பரபரப்பு; வனத்துறை அதிகாரிகள் விசாரணை தீவிரம்!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் பகுதியில், தனது விவசாயப் பயிர்களை நாசம் செய்வதாகக் கூறி, உணவுப் பொருளில் விஷம் வைத்துக் தேசியப் பறவையான 50-க்கும் மேற்பட்ட மயில்களைக் கொன்ற விவசாயி ஒருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள விவசாய நிலம். விவசாயி ஜான்சனுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிர்களை மயில்கள் நாசம் செய்து வந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த ஜான்சன், அவற்றை ஒழிக்கும் நோக்கத்துடன் உணவில் விஷம் கலந்து வைத்துள்ளார். அந்த விஷம் கலந்த உணவுகளைத் தின்றதால், ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட மயில்கள் பரிதாபமாக உயிரிழந்தன.
இதுகுறித்துத் தகவல் அறிந்த புளியங்குடி வனப் பாதுகாவலர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறை அதிகாரிகளும், குருவிகுளம் காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். பல்வேறு இடங்களில் இறந்து கிடந்த மயில்களின் உடல்களை அவர்கள் சேகரித்து, ஒரு இடத்தில் உடற்கூறு ஆய்வு (Post-Mortem) செய்தனர்.
தேசியப் பறவையான மயில்களைக் கொன்ற குற்றத்திற்காக வனத்துறை அதிகாரிகள் விவசாயி ஜான்சனைக் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட தேசியப் பறவைகளை விவசாயி ஒருவர் விஷம் வைத்துக் கொன்ற கொடூரச் சம்பவம், குருவிகுளம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
