டெல்டாக்காரர் என்று கூறும் முதல்வருக்கு விவசாயிகள் 2026-ல் பதிலளிப்பார்கள் - காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை குறித்த கேள்விக்கு பதிலளித்த பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவி!
கோவையில் இன்று நடைபெற்ற இந்திய கட்டிடக் கலை வல்லுநர்கள் குழுமத்தின் கண்காட்சியில் பங்கேற்ற பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், மாநில அரசின் செயல்பாடு, சமூக நீதி, கல்வித் திட்டம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் குறித்துக் கேள்விகளை எழுப்பினார்.
சமூக நீதி பேசுகின்ற திராவிட மாடல் அரசாங்கத்தில் சமூக நல விடுதிகள் மூடப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் சமூக நீதி மாடல் அரசு என்று பெயர் பலகை மாட்டிவிட்டு, சமூக நீதி விடுதிகளை மூடுவதுதான் இவர்களது சாதனை என்று வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார்.
தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்று கூறும் திராவிட மாடல் அரசு, அதில் உள்ள பல்வேறு விஷயங்களைத் தாங்களே புதிதாகச் செயல்படுத்துவதாகக் கூறுகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பட்டம் சூட்டிக் கொண்டு தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்துகிறார்கள். ஆனால், தமிழ் பேசும் மாணவர்கள் படிக்கும் பள்ளிக் கூடங்கள் மூடப்படுகின்றன.
பல்கலைக்கழக சட்ட மசோதா: பல்கலைக்கழக நிலப்பரப்பைக் குறைத்துச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்துவிட்டு, பிறகு கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு வந்தவுடன் வாபஸ் பெறும் இந்த 'டிராமா அரசை' நடத்த வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மழைக் காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்ததால்தான், இன்று விவசாயிகள் கடும் துயரத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விட்டுவிட்டு, தும்பை விட்டு வாலை பிடிப்பதாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. டெல்டாக்காரர் என்று முதல்வர் கூறி வரும் நிலையில், டெல்டா விவசாயிகள் அதற்குப் பதில் அளிக்க 2026-ஆம் ஆண்டிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அங்கு சமூக நீதி இல்லை என்று விமர்சித்தார்.
PM-SRI திட்டத்தில் தமிழ்நாடு கூடிய விரைவில் இணையும். கேரள மாநிலமே இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டபோது, தமிழக அரசும் இதனை ஏற்றுக் கொள்கின்ற காலம் நிச்சயம் வரும். கல்வியில் அரசியலைக் கலக்காமல் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு இணைய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்றார்.
SIR திட்டத்திற்குக் (வாக்காளர் பட்டியல் திருத்தம்) கிளம்பும் எதிர்ப்புகள் குறித்துப் பேசிய அவர், வாக்காளர்களை நீக்குவதாக எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் நோக்கம், 18 வயது ஆனவர்களைச் சேர்ப்பது, இறந்தவர்களை நீக்குவது, இரட்டைப் பதிவுகளை நீக்குவதுதான் என்று விளக்கினார்.
தமிழக வெற்றிக் கழகத்தைப் பா.ஜ.க. முடக்கி வைத்து உள்ளது என்பது அபாண்டமான குற்றச்சாட்டு ஆகும். நாட்டில் அனைத்துக் கட்சிகளும் சுதந்திரமாகச் செயல்படச் சட்டம் உள்ளது என்று திட்டவட்டமாக மறுத்தார். கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு விஜய் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கிறார் என்பதே நல்ல விஷயம் என்றும், சி.பி.ஐ. விசாரணை முடிந்து உண்மை வெளிவரும்போது நீதி கிடைப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
அயல்நாட்டுத் தூதர்கள் விஜயைச் சந்திக்க மத்திய உள்துறையிடம் கேட்டுள்ளார்களா என்ற கேள்விக்கு, எனக்கு அதைப் பற்றித் தெரியவில்லை, நான் உள்துறை அமைச்சகத்தில் இல்லை என்று பதிலளித்தார். இதைத் தவிர, ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்துப் பிரதமர் மோடியைப் பாராட்டிய வானதி சீனிவாசன், வரும் 28-ஆம் தேதி கோவைக்கு வருகை தரும் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விளக்கினார்.
